பி. எம். கேர்ஸ் திட்டம் : காரணம் தெரிவிக்காமல் நிராகரிக்கப்பட்ட 51 % விண்ணப்பங்கள்.. !!
51 Percent Of PM Cares Childrens Scheme Applications Rejected
கடந்த 2020ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றின் போது பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் "பி. எம். கேர்ஸ்" திட்டம் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி கடந்த 2020, மார்ச் 11ம் தேதி முதல் 2023, மே 5ம் தேதி வரை கொரோனா பெருந்தொற்று காரணமாக தனது பெற்றோர்கள் இருவரையோ, அல்லது யாரேனும் ஒருவரையோ இழந்திருந்தாலோ, அலலது சட்ட ரீதியான பாதுகாவலரையோ, தத்தெடுத்த பெற்றோர்களில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்திருந்தாலோ, அந்த குழந்தைகளுக்கு பி. எம். கேர்ஸ் திட்டத்தின் மூலம் ஆதரவளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், கொரோனாவால் பெற்றோரை இழந்து ஆதரவற்று நிற்கும் குழந்தைகளின் கல்வி உதவி, விரிவான பாதுகாப்பு, மற்றும் அவர்களது 23 வயதில் தற்சார்பு உடையவர்களாக இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு நிதியுதவி அளிப்பது, சுகாதாரக் காப்பீடு உள்ளிட்ட அம்சங்கள் இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 9 ஆயிரத்து 331 விண்ணப்பங்களில் 4 ஆயிரத்து 781 விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன. நாடு முழுவதும் 558 மாவட்டங்களில் இருந்து 4 ஆயிரத்து 532 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் 18 விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கும் நிலையில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டதற்கான காரணங்கள் குறித்து இதுவரை எந்த விளக்கமும் அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
51 Percent Of PM Cares Childrens Scheme Applications Rejected