குஜராத் பாலம் விபத்து.! பெற்றோரை இழந்த 20 குழந்தைகளுக்கு அதானி அறக்கட்டளை ரூ.5 கோடி நன்கொடை.!
Adani Foundation 5 cr endowment to benefit 20 children who lost parents in Gujarat bridge collapse
குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே உள்ள வரலாற்று சிறப்புமிக்க தொங்கு பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன் மறுசீரமைக்கப்பட்டுமீண்டும் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இந்நிலையில் சாத் பூஜை மற்றும் வார விடுமுறையையொட்டி கடந்த அக்டோபர் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை அந்த தொங்குபாலத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். அப்போது திடீரென தொங்குபாலம் அறுந்து விழுந்தது.
இந்த கோர விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் உட்பட 135 பேர் உயிரிழந்தனர். 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் பற்றி விசாரிக்க 5 பேர் கொண்ட கமிட்டி ஒன்றையும் குஜராத் அரசு அமைத்து உள்ளது. இந்த வழக்கில் 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் பிரதமர் மோடி மற்றும் குஜராத் முதல்-மந்திரி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த விபத்தில் பெற்றோரில் ஒருவர் அல்லது இரண்டு பேரையும் இழந்த 20 குழந்தைகளின் நலனுக்காக ரூ.5 கோடி நன்கொடை அளிக்க அதானி தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது.
இந்த விபத்தில் அதிகாரப்பூர்வ ஆவண தகவலின்படி, 7 குழந்தைகள் பெற்றோர் இருவரையும், 12 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரையும் இழந்துள்ளன. மேலும் கணவரை இழந்த கர்ப்பிணியின் இன்னும் பிறக்காத குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் இவர்கள் அனைவரையும் சேர்த்து, மொத்தம் 20 குழந்தைகளுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க அதானி தொண்டு நிறுவனம் முன்வந்து, மோர்பி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அதற்கான பணியை மேற்கொண்டு வருகிறது.
English Summary
Adani Foundation 5 cr endowment to benefit 20 children who lost parents in Gujarat bridge collapse