அமித் ஷாவின் பேச்சு பெரும் சர்ச்சை: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
Amit Shah speech is a big controversy Opposition parties protest in Parliament Both houses are adjourned for the whole day
நாட்டின் அரசியலமைப்பை முன்னிலைப்படுத்தி மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு கடும் விமர்சனங்களை எழுப்பியது.
அமித் ஷா பேசியபோது, "அம்பேத்கர்... அம்பேத்கர்... அம்பேத்கர்" என முழக்கமிடுவது இப்போது ஒரு "ஃபாஷன்" ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சுவர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்," என்ற அவர் கருத்து எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியது.
மக்களவையும் மாநிலங்களவையிலும் அமளி
அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி மக்களவையும் மாநிலங்களவையிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூட்டம் தொடங்கியதும், எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவை செயல்பட முடியாத நிலையில், மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு 2 மணிக்கு அவை மீண்டும் தொடங்கியபோதும், எதிர்க்கட்சிகள் திரளாக அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மீண்டும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல், மாநிலங்களவையும் எதிர்க்கட்சிகளின் மாறாத எதிர்ப்பால் இன்று மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு மீண்டும் அவை கூடியபோதும், தொடர்ந்து அமளி நீடித்து, மாநிலங்களவையும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமித் ஷாவின் கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு குரல் கொடுத்துள்ளனர்.
English Summary
Amit Shah speech is a big controversy Opposition parties protest in Parliament Both houses are adjourned for the whole day