பீகார் பாலம் விபத்து: காணாமல்போன காவலாளியின் உடல் 10 நாட்களுக்குப் பிறகு மீட்பு...!
Bihar bridge collapse Body of the missing security guard found after 10 days
பீகார் பாலம் இடிந்து விழுந்து 10 நாட்களுக்குப் பிறகு காணாமல் போன காவலாளியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த ஜூன் 4 அன்று பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நான்கு வழி சுல்தாங்கஞ்ச்-அகுவானி காட் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அப்பொழுது பாலத்தில் பணியாற்றி வந்த காவலாளி ஒருவர் இடிபாடுகளில் சிக்கி மாயமானார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் அவரை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்த நிலையில் பாலம் இடிந்து 10 நாட்களுக்குப் பிறகு, காணாமல் போன காவலர் இடிபாடுகளுக்குள் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். அவர் பாலம் கட்டும் ஹரியானாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் காவலாளி விபாஷ் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பர்பாடா காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி தர்மேந்திர குமார், விபாஷ் குமாரின் உடல் மீட்கப்பட்டதும், குடும்ப உறுப்பினர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது மாமா ராம்விலாசா யாதவ் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் குமாரின் உடலை அடையாளம் கண்டனர். இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றார். இதற்கு முன்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி இந்தப் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Bihar bridge collapse Body of the missing security guard found after 10 days