சோனியாகாந்தி மீது வழக்கு...10-ந் தேதி விசாரணை!
Case against Sonia Gandhi Hearing on the 10th
நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரத்தை சோனியா அவமதித்து விட்டதாக கூறி பீகார் மாநிலம் முசாபர்பூர் கோர்ட்டில் சோனியா காந்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கு வருகிற 10-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 31-ந் தேதி நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றியது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, "ஜனாதிபதி, உரையின் இறுதிப்பகுதியை வாசிக்கும்போது மிகவும் சோர்வடைந்து விட்டார் என்றும் அவரால் பேச முடியவில்லை என்றும் அவர் பாவம்" என்று கூறியிருந்தார். இதையடுத்து சோனியா காந்தியின் இந்த கருத்து பா.ஜனதாவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் சோனியா காந்தியின் இந்த கருத்துக்கு பிரதமர் மோடி உள்பட பா.ஜனதா தலைவர்கள் பலரும் சோனியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.அதை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையும் சோனியா காந்தியின் பேச்சை கண்டித்திருந்தது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பீகார் மாநிலம் முசாபர்பூர் கோர்ட்டில் சோனியா காந்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரத்தை சோனியா அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டி சுதிர் ஓஜா என்கிற வக்கீல் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் சோனியா மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள சுதிர் ஓஜா, இந்த வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோரையும் இணை குற்றவாளிகளாக சேர்த்து அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து இந்த வழக்கு முசாபர்பூர் கோர்ட்டில் வருகிற 10-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
English Summary
Case against Sonia Gandhi Hearing on the 10th