இனி இந்தியா-மலேசியா இடையே ரூபாயில் வர்த்தகம்.. வெளியுறவுத் துறையின் அதிரடி அறிவிப்பு..!!
Central govt announced trade to Malaysia in indian rupees
இந்தியா மற்றும் மலேசியா இடையேயான வர்த்தகம் இனி இந்திய ரூபாயில் நடைபெறும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "இந்தியா - மலேசியா இடையேயான வர்த்தகம் இந்திய ரூபாயில் நடைபெறும் அதே சமயம் இதற்கு முன்பு இருந்த நாணய பரிவர்த்தனை முறையும் தொடரும்.
கடந்த 2022 ஜூலை மாதம் இந்திய ரூபாய் மூலம் சர்வதேச பணபரிவர்த்தனை மேற்கொள்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த முயற்சி உலகளாவிய வர்த்தகத்தின் வளர்ச்சியை எளிதாக்குவது மற்றும் இந்திய ரூபாயில் உலகளாவிய வர்த்தகங்கள் நடைபெறுவதை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது'' என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓர் ஆண்டுக்கு மேல் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா எடுத்த ராணுவ நடவடிக்கையை அடுத்து ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதன் விளைவாக அமெரிக்க டாலர் தட்டுப்படு ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச வர்த்தகத்தை கடுமையாக பாதித்து வரும் நிலையில் மாற்று நாணயங்கள் மூலம் சர்வதேச வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் பல நாடுகள் இறங்கி உள்ளன.
அதனால் இந்தியாவும் ரூபாயில் சர்வதேச வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, நியூசிலாந்து, இஸ்ரேல், இலங்கை, கென்யா, போட்ஸ்வானா, ஃபிஜி, கயானா, மொரிஷியஸ், ஓமன், சீசெல்ஸ், தான்சானியா, உகாண்டா, சிங்கப்பூர், மியான்மர் ஆகிய 17 நாடுகள் இந்திய ரூபாய் மூலம் வர்த்தகம் செய்ய முன்வந்துள்ளன. அதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இன்று (ஏப்ரல்.1) முதல் இந்தப் பட்டியலில் மலேசியாவும் இணைந்துள்ளது. இதன் மூலம் மலேசியா உட்பட 18 நாட்கள் நாடுகளுக்கு இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Central govt announced trade to Malaysia in indian rupees