ரூ. 50 லட்சம் பேரம்.. வெளியான பரபரப்பு அறிக்கை.. பாஜக அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு..!!
FIR registered against Somanna for negotiating with JDS candidate
கர்நாடக மாநில அமைச்சரவையில் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்து வருபவர் சோமண்ணா. இவர் கடந்த தேர்தலில் பெங்களூரு கோவிந்தராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து போட்டியிடுகிறார். அதேபோன்று சாம்ராஜ் நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கோவிந்தராஜ் நகர் தொகுதியில் இருந்து வெளியேறி புது தொகுதிகளில் போட்டியிடுவதால் அவர் தேர்தலில் பின்னடைவு சந்திக்கலாம் என பரவலாக பேசப்படுகிறது. இதன் காரணமாக சில நாட்களுக்கு முன்பு சாம்ராஜ் நகர் தொகுதி ஜே.டி.எஸ் வேட்பாளர் மல்லிகார்ஜுன சாமியிடம் வேட்புமனு வாபஸ் பெற கோரி ரூ.50 லட்சம் பேரம் பேசிய சோமண்ணாவின் ஆடியோ வெளியானது.
இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சோமண்ணா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கோரிக்கை வைத்தன. இந்த நிலையில் கர்நாடக மாநில தேர்தல் நடத்தும் அதிகாரி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் "சமூக வலைதளங்களில் சாம்ராஜ் நகர் தொகுதி பாஜக வேட்பாளர் சோமண்ணா ஜே.டி.எஸ் வேட்பாளர் மல்லிகார்ஜுன சாமி இடையான நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ விவகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. தேர்தலை அமைதியான முறையில் அதே நேரத்தில் நேர்மையாக நடத்துவதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் சாம்ராஜ் நகர் போலீசார் அமைச்சர் சோமண்ணா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த விவகாரம் கர்நாடக தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
FIR registered against Somanna for negotiating with JDS candidate