புதுச்சேரி: ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த ஓட்டல் ஊழியர்.. தூக்கு போட்டு தற்கொலை.!
Hotel worker suicide in Puducherry
புதுச்சேரியில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த ஓட்டல் ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
புதுச்சேரி சோம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவர் தனியார் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அய்யனார் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு லட்சம் கணக்கில் பணத்தை இழந்து உள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கி இருந்ததால் அதனை திருப்பிக் கொடுக்க முடியாமல் பரிதவித்து வந்துள்ளார்.
மேலும் ஆன்லைன் ஆப் மூலமும் கடன் பெற்றிருந்ததால் கடும் நெருக்கடியில் சிக்கி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் அய்யனார் புதுவை மீலாது வீதியில் அவர் தங்கி இருந்த விடுதியில் ஆடியோ ஒன்றை பதிவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அந்த ஆடியோவில் சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று வேலை பார்த்து கடனை அடைத்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அங்கு சரியான வேலை கிடைக்காததால் மீண்டும் திரும்பி வந்து, ஏற்கனவே வேலை பார்த்த ஹோட்டலில் வேலை செய்தேன் என்றும், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக 50,000 ரூபாய் ஆன்லைனில் விளையாட்டில் இழந்து உள்ளேன் என்றும் ஆடியோவில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அய்யனாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Hotel worker suicide in Puducherry