காரைக்கால் மத்திய மண்டல நீர்த்தேக்க தொட்டியில் நாளை பராமரிப்பு பணி.!
karaikal water issue
கடந்த சில வாரங்களாக புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டத்தில் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பாதிக்கப்பட்ட நோயாளிகள் பலரும் மாவட்ட அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெரும் சிலருக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர், இணை நோய் காரணமாக நேற்றுஉயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
காலரா பரவல் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு காரைக்காலில் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முகம்மது மன்சூர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த 3 நாட்கள் விடுமுறையின்போது பள்ளி, கல்லூரிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், காரைக்கால் மத்திய மண்டல நீர்த்தேக்க தொட்டியில் நாளை பராமரிப்பு பணி காரணமாக, காரைக்கால், பச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை நண்பகல் மற்றும் மாலையில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் வழக்கம் போல் குடிநீர் வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
முன்னதாக, வாந்தி, வயிற்றுப்போக்கால் காரைக்காலில் இதுவரை 1,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காலரா தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.