இதயத்தை உலுக்கும் பேரழிவு..! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனையுடன் பேட்டி!
Keralas Wayanad
கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் பலரின் உடல்கள் நிலச்சரிவு இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "
"நேற்று மிகக் கடுமையான மழை பெய்தது. நேற்று நள்ளிரவு 2 மணிக்கும், 4.10 மணிக்கும் என 2 முறை நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை 93 பேரின் உடல்களை மீட்டுள்ளோம் இதன் எண்ணிக்கை மாறலாம்.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு 128 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றிரவு தூங்கச் சென்ற பலர் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்”
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது.
வயநாட்டில் 45 முகாம்களிலும், மாநிலம் முழுவதும் 118 முகாம்களிலும் 5,531 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு படை, என்.டி.ஆர்.எப்., போலீசார் உள்ளிட்டோர் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
ராணுவம் மற்றும் கடற்படையின் பல்வேறு பிரிவுகள் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுடன் நின்று, நாம் நமது ஆதரவை நல்க வேண்டிய நேரம்.
5,500 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5 அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தனர்" கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.