மணிப்பூரில் கலவரம்.. எங்கள் மாநிலம் பற்றி எரிகிறது.. உதவி கேட்கும் மேரி கோம்..!!
Mary Kom asked for help as state burning in Manipur riots
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின, பழங்குடி அல்லாத சமூகத்தினர் வாழ்ந்த வருகின்றனர். அந்த மாநிலத்தில் மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமுகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்த்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமுகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் மலைப்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் நேற்று பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது.
இந்த பேரணிக்கு எதிராக மாநிலத்தின் சில பகுதிகளில் எதிர்தரப்பு பேரணி நடைபெற்றது. அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் மலை பகுதியில் உள்ள மாவட்டமான சவ்ரசந்திரபூரில் இரு தரப்புக்கும் இடையே நேற்று கல் வீச்சு சம்பவம் அரங்கேறியது. இந்த மோதலின் போது வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டன. தெருக்களில் இருந்த கார்கள், பைக்குகள், கடைகளுக்கும் கலவரத்தில் ஈடுபட்டோர் தீ வைத்து எரித்தனர்.
இந்த வன்முறை மெல்ல அண்டையில் உள்ள மலைப்பகுதி மாவட்டங்களுக்கும் பரவியது. இந்த வன்முறை சம்பவத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையேயான இந்த மோதலால் மணிப்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. சமூகவலைதளங்களில் கலவரம் தொடர்பான காட்சிகளும் பகிரப்பட்டதால் கலவரம் மெல்ல மெல்ல அண்டை மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது.
வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பான வீடியோக்கள், போலி வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரு தரப்புக்கு இடையேயான மோதல் கலவரமாக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மணிபூர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தனது ட்விட்டர் பக்கத்தில் "எனது மாநிலம் பற்றி எரிகிறது. தயவுசெய்து உதவுங்கள்" என பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் உள்ளிட்டவரை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Mary Kom asked for help as state burning in Manipur riots