குஜராத் பாலம் விபத்து: மாநிலம் முழுவதும் இன்று துக்க நாள் அனுசரிப்பு.!
Mourning observed across Gujarat today due to bridge accident
குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே உள்ள வரலாற்று சிறப்புமிக்க தொங்கு பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன் மறுசீரமைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில் சாத் பூஜை மற்றும் விடுமுறையையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அந்த தொங்குபாலத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். அப்போது பாரம் தாங்காமல் திடீரென தொங்குபாலம் அறுந்து விழுந்தது.
இந்த கோர விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் உட்பட 135 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து குஜராத்தில் பாலம் விபத்து நடந்த பகுதியில் பிரதமர் மோடி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
இந்நிலையில் குஜராத் முதல் மந்திரி பூபேந்திர பட்டேல் வெளியிட்ட ட்விட்டர் செய்தி குறிப்பில், குஜராத்தில் பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நவம்பர் 2ம் தேதி மாநிலம் முழுவதும் துக்கம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேசிய கொடி அரசு கட்டிடங்களில் அரை கம்பத்தில் பறக்க விடப்படும். குஜராத்தில் அன்று ஒரு நாள் விழாக்களோ, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோ எதுவும் நடைபெறாது என பதிவிட்டிருந்தார்.
இதன்படி, இன்று மோர்பி தொங்கு பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குஜராத் முழுவதும் துக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநிலத்தில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டும், அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும் உள்ளது.
English Summary
Mourning observed across Gujarat today due to bridge accident