பெங்களூரு : மருத்துவ ஆடையில் நோயாளியிடம் நகைகளை திருடிய பெண் - போலீசார் வலைவீச்சு.!
near banglore woman steal patient jewellary in hospital
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் அசோக்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 11-ந்தேதி காலை சரசம்மா என்ற மூதாட்டி மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, அன்று மதியம் 12 மணியளவில் மருத்துவர் போல் சீருடையில் வந்த ஒரு பெண், சரசம்மாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி குடும்பத்தினரை வெளியே அனுப்பியுள்ளார். அதன் பின்னர் அவர், சரசம்மா அணிந்திருந்த ரூ.2¼ லட்சம் மதிப்புள்ள தங்கநகைகளை திருடி சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து சரசம்மாவை பார்ப்பதற்கு வந்த குடும்பத்தினர், தங்க நகைகள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் மருத்துவர் சீருடையில் வந்த பெண்ணை தேடி பார்த்தனர். ஆனால், அந்த பெண்ணை எங்குத் தேடியும் கிடைக்கவில்லை.
இதனால், இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதன் படி, அவர்கள் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்த போது ஒரு பெண் மருத்துவர் போல் சீருடை அணிந்து சென்று, சரசம்மாவிடம் நகைகளை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதைதொடர்ந்து, சம்பவம் தொடர்பாக அசோக்நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகள் மூலம் நோயாளியிடம் நகைகளை திருடிய பெண்ணை வலைவீசி தேடி வருகிறார்கள்.
English Summary
near banglore woman steal patient jewellary in hospital