சென்னை செயின் பறிப்பு கொள்ளையின் எதிரொலி; மகாராஷ்டிரா தானேவில் போலீசார் குவிப்பு..!
Police raid Maharashtras Thane district home to Chennai chain snatching robbers
சென்னையில் கடந்த 25-ஆம் தேதி காலை சைதாப்பேட்டை, பெசன்ட் நகர் உள்ளிட்ட ஆறு இடங்களில் அடுத்தடுத்து ஈரானிய கொள்ளை கும்பல், செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஜாபர் குலாம் ஈரானி உள்ளிட்ட மூன்று பேரை, போலீசார் கைது செய்ததோடு, ஜாபர் குலாம் ஈரானி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில், சென்னையில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட ஜாபர் குலாம் உசேன் ஈரானியின் சொந்த ஊரான, மஹாராஷ்டிராவின் தானே மாவட்டம் பஸ்தி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரானை பூர்வீகமாகக் கொண்ட இந்த கொள்ளையர்கள், மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் கல்யாணில், அம்பிவாலி பகுதியில் உள்ள பஸ்தியில் வசிக்கின்றனர். செயின் பறிப்பு, பைக் திருட்டு போன்ற குற்றங்களுக்கு ஈரானிய கொள்ளையர்கள் பிரபலம்.

போலீசார் கொள்ளையரை அடையாளம் கண்டு, அவர்களை பிடிக்கச் சென்றால், அங்குள்ள பஸ்தி பகுதி பெண்கள் ஆடைகள் இல்லாமல் சுற்றிலும் அரண் போல் நின்று, போலீசாரை நெருங்க விடாமல் பெண்கள் தடுப்பர். அத்தனையும் மீறி பஸ்தி பகுதிக்குள் போலீஸ் நுழைந்தால் தாக்குதல் நடத்துவதுடன், போலீஸ் வாகனங்களையும் சூறையாடி விடுவர்.
இந்த நிலையில், சென்னையில் நடந்த என்கவுன்டரில் ஜாபர் குலாம் உசேன் கொல்லப்பட்ட தகவல் கிடைத்ததை தொடர்ந்து, பஸ்தி முழுவதும் மயான அமைதி நிலவுகிறது. அத்துடன், அவர்கள் ஏதாவது வன்முறையில் இறங்கக் கூடும் என போலீசார் கருதுகின்றனர். இதனால், பஸ்தி, அம்பிவாலி உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மஹாராஷ்டிரா போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
Police raid Maharashtras Thane district home to Chennai chain snatching robbers