நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்! காங்கிரஸின் தேர்தல் அறிக்கையின் காப்பி - ராகுல் காந்தி விமர்சனம்!
RahulGandhi say Budget 2024 in Congress Manifesto
காங்கிரஸ் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டுகள் ஆகியவற்றை வெட்டி ஒட்டி இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று 2024-2025 மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பிற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை, திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
அதே சமயத்தில், கடந்த 10 ஆண்டுகளாக ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு செய்யப்பட்டு வந்த நலன்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் தொடர்வதை பட்ஜெட் உறுதி செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டை காப்பி பேஸ்ட் செய்யும், பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாக மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், இந்த மத்திய பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட். கூட்டணி கட்சிகளை தாஜா செய்தும், மற்ற மாநிலங்களை வஞ்சித்துள்ளது.
அம்பானி மற்றும் அதானிக்கு பயனளிக்கும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. பெரு முதலாளிகளை குஷிப்படுத்தியும், சாமானிய மக்களுக்கு எத்தகைய நிவாரணமும் வழங்காத பட்ஜெட் என்றும் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
இதேபோல், மத்திய பட்ஜெட் அரசியல் சார்புடையது, மக்களுக்கு எதிரான பட்ஜெட், மேற்கு வங்காள மாநிலம் முற்றிலும் ஏமாற்றம் அடைந்துள்ளது. ஏழை மக்களின் நலனை கவனத்தில் எடுத்துக் கொள்வில்லை என்று மேற்குவங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
முன்னதாக, மத்திய பட்ஜெட்டால் மக்கள் மகிழ்ச்சி அடைவதற்கான எந்த காரணமும் இல்லை. பல முக்கியமான விஷயங்கள் குறித்த பெயர்கள் கூட இடம் பெறவில்லை என மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசித்தருர் விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
RahulGandhi say Budget 2024 in Congress Manifesto