கர்நாடகாவில் களமிறங்கிய 13 தமிழக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!
Tamil Nadu IAS IPS Officers in Karnataka for election duty
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதே போன்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சியில் தலைவர்கள் கர்நாடகாவை முற்றுகையிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் அரசியல் களம் அனல் பறக்கிறது.
எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடக மாநில தேர்தல் அமையும் என்பதால் அனைத்து தரப்பு மக்களிடமும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவினர் பல்வேறு முறை கேடுகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது. நேற்று பாஜக அமைச்சர் சோமண்ணா மீது ராம்நகர் போலீசார் பேரம் பேசிய வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளில் முன்னெடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளை களம் இறக்கி உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 11 ஐஏஎஸ் அதிகாரிகள், 2 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 13 பேர் கர்நாடக தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி தமிழ்நாடு காகிதம் மற்றும் கிராம தொழில் வாரியம் தலைவர் சங்கர், பிற்படுத்தப்பட்டோர் நல கமிஷனர் சம்பத் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மலர்விழி, வீரராகவர், சோபனா உள்ளிட்ட 11 ஐஏஎஸ் அதிகாரிகள் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 13 அதிகாரிகளுக்கும் கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்கள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. வடக்கு கர்நாடகாவில் 5 பேரும் தெற்கு கர்நாடகாவில் 6 பேரும் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய தேர்தல் ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் இவர்கள் கர்நாடகாவில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் தேர்தல் ஆணையத்திற்கு நேரடியாக தெரிவிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Tamil Nadu IAS IPS Officers in Karnataka for election duty