மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை!...குண்டுவெடிப்பில் இரண்டு பேர் பலி!
Violence breaks out again in Manipur Two killed in bomb blast
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டிலிருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே நடைபெற்று வந்த வன்முறை பல மாதங்களாக ஓய்ந்திருந்த நிலையில், திடீரென நேற்று வன்முறை ஏற்பட்டு உள்ளது.
மணிப்பூரில் உள்ள மேற்கு இம்பால் நகரில் கவுடிரக் பகுதியில் குகி பயங்கரவாதிகள் சிலர் கும்பலாக கூடி ராக்கெட்டுடன் கூடிய எறிகுண்டுகளை குவித்ததோடு உயர் தொழில்நுட்பம் வாய்ந்த ஆளில்லா விமானங்களின் உதவியுடன் எறிகுண்டுகளை வீசி, துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். நேற்று மதியம் 2 மணியளவில் தொடங்கிய இந்த தாக்குதல் இரவு 7.30 மணி வரை நீடித்து உள்ளது. அந்த பகுதியில் தொடர்ந்து இரவு முழுவதும் பதற்ற நிலையே காணப்பட்டது.
இந்த வன்முறை சம்பவத்தில் கிராமத்தில் இருந்த வீடுகள், வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.இதனால், பாதுகாப்பான இடங்களை தேடி மக்கள் வேறு இடங்களுக்கு தப்பியோடினர். இந்த எதிர்பாராத தாக்குதலில் சிக்கி பெண் ஒருவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் செய்தி சேகரிக்க சென்ற நிருபர், காவல் பணியில் ஈடுபட்டிருந்த 2 போலீசார் உள்பட 10 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.
மேலும் போர் பகுதியில் பயன்படுத்தப்படும் வெடிகுண்டுகள், நேற்று பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்களுக்கு எதிரான தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பயிற்சி பெற்ற நபர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் அவர்களின் ஆதரவும் உள்ளது என்பது மறுக்க முடியாதது என்று, மணிப்பூர் காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தொடர்ந்து, மணிப்பூர் டி.ஜி.பி. ராஜீவ் சிங், தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்கும்படி அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
English Summary
Violence breaks out again in Manipur Two killed in bomb blast