பாரம்பரிய உணவு... கூழ் செய்வது எப்படி?!
How to prepare Koozh in tamil
பாரம்பரிய உணவு கூழ்:
தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று கூழ். கேழ்வரகு, கம்பு போன்றவற்றின் கூழ்தான் முந்தைய நாட்களில் பிரதான உணவாகவே இருந்தன. நாளடைவில் கேழ்வரகு, கம்பு பயன்பாடு குறைந்து அரிசி உணவுக்கு மாறிவிட்டனர்.
கூழ் என்பது கம்பு மற்றும் கேழ்வரகு மாவில் தயாரித்து கூழ் நிலையில் வழங்கப்படும் உணவு. அதிக அளவு தண்ணீர் சேர்த்து, உணவு பொருள் குறைவாய் கலந்து செய்யப்படும் கூழ் குறைந்த செலவில் அதிக நபர்களின் பசியை தீர்க்கும் அமிர்தமாகும்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 200 கிராம்
அரிசி நொய் - 100 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தயாரிக்கும் முறை :
கேழ்வரகு, அரிசி, உப்பு ஆகியவற்றைக் கொண்டு கேழ்வரகு கூழ் செய்யலாம். ஒரு குவளை கேழ்வரகு மாவை எடுத்து கொள்ள வேண்டும். அந்த மாவை நன்கு சலித்து எடுத்து சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
அதனுடன் கால் குவளை உடைத்த நொய் அரிசியை எடுத்து கொள்ள வேண்டும். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கிளறி விட வேண்டும். பிறகு அதில் இரண்டு குவளை தண்ணீரை ஊற்ற வேண்டும். நன்றாக கரைத்து விட வேண்டும். தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். 6 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
பிறகு அடுப்பை பற்ற வைத்து தீயை சீராக வைத்து கொள்ள வேண்டும். பிறகு கனமான பாத்திரத்தில் கரைத்து வைத்து இருந்த கரைசலை ஊற்றி ஒரு முறை நன்கு கிளறி விட்டு பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். பிறகு மெதுவாக கரைசல் கூழ் பதத்திற்கு வரும் வரை கிளறி விட வேண்டும்.
சுமார் 5 முதல் 10 நிமிடத்துக்குள் கூழ் நன்றாக கொதித்து விடும். கூழை தொடர்ந்து மரக்கரண்டியால் கிளற வேண்டும். இடையில் விட்டு விட்டால் அடிபிடித்து கட்டியாக மாறிவிடும். கூழ் நன்றாக கொதித்து விட்டது என உறுதி செய்துகொண்டு இறக்கி வைத்து அதில் சிறு துண்டுகளாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை கொட்டி ஒரு முறை கிளறி விட வேண்டும். இப்போது கூழ் ரெடியாக இருக்கும்.
இதற்கு சைட் டிஷ் ஆக கருவாட்டு குழம்பு, வெங்காயம், மாங்காய், மோர் மிளகாயை சேர்த்து உட்கொள்ளலாம்.
கூழ் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்:
கூழ் கேழ்வரகிலிருந்து தயார் செய்வதால் அதில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இது எலும்புகளுக்கு மிகவும் முக்கியம். பசியின்போது சுரக்கும் அமிலத்தை சற்றுக் குறைத்து உடல் எடையை நிலையாக வைத்து இருக்க உதவும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதைக் காலை சிற்றுண்டியாக பருகுகின்றனர். கேழ்வரகு கூழை தொடர்ந்து காலையில் உட்கொள்வதால் சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களுடைய சர்க்கரை அளவு சற்று குறைந்து விடும்.
நிலங்களிலும், வயல்களிலும் வேலை செய்யும் பல கூலித் தொழிலாளிகள் விரும்பி உண்ணும் உணவாக இது கருதப்படுகிறது.
உடலில் இருக்கும் தேவையற்ற கெட்ட கொழுப்பை அகற்றுவது மட்டுமின்றி குடலுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. கூழில் நார் சத்து அதிகமாக உள்ளது. குருதியில் இருக்கும் கொழுப்பையும் குறைக்க வல்லது.
English Summary
How to prepare Koozh in tamil