சுவையான மற்றும் உடலுக்கு சத்தை வழங்கும் காரப்பொடி மீன் குழம்பு செய்வது எப்படி?.!!
how to cook karapodi fish kulampu in home
இன்று நாம் காண இருப்பது காரப்பொடி பூண்டு மிளகு குழம்பு., காரப்பொடி மீனுக்கு பல மருத்துவ குணங்கள் உள்ளன. இது எவ்வளவு கடினமான நெஞ்சு சளியையும் கரைத்து விடும். ஆஸ்மா நோயாளிகள் பிற சுவாச கோளாறுகளுக்கு இந்த மீன் குழம்பு நல்ல நிவாரணி.
பாலூட்டும் தாய்மார்கள், காய்ச்சல் கண்டவர்கள், புண் ஆறாமல் இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு குறைவாக இருப்பவர்கள் இந்த மீன் குழம்பை இந்த முறையில் செய்து சாப்பிடலாம். இது ஒரு காரமான உணவு. இவ்வளவு காரமா என கேட்டு எரிச்சல் அடைய வைக்க வேண்டாம். சிலவற்றை அந்த பொருட்கள் சேர்த்து செய்தால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
காரப்பொடி மீன் - ஒரு கிலோ.,
பெரிய வெங்காயம் - இரண்டு பொடியாக நறுக்கவும்.,
சின்ன வெங்காயம் - பத்து.,
பூண்டு - இரண்டு முழு பூண்டு தோல் நீக்கி பாதி பூண்டு முழுதாக வைக்கவும். மீதியை மிளகுடன் சேர்ந்து விழுதாக அரைக்கவும்.,
மிளகு - ஒன்றிலிருந்து இரண்டு ஸ்பூன் உங்கள் காரத்திற்கு ஏற்ப. இந்த பூண்டையும், மிளகையும் ஒன்றாக கொர கொரப்பாக அரைக்கவும்.,
தக்காளி - இரண்டு பொடியாக நறுக்கியது.,
புளி - முக்கால் கைப்பிடி எடுத்து உருட்டினால் பாதி திருப்பதி லட்டு சைஸ் வர வேண்டும். ( புளி, மற்றும் மிளகாய் தூள் பொறுத்து தான் குழம்பின் அளவு வரும் அதனால் உங்கள் புளியின் தன்மைக்கு ஏற்ப அளவை கூடவோ குறைக்கவோ செய்யவும். எங்கள் வீட்டில் மீன் குழம்பு இரண்டு நாள் எல்லா வேளையும் சாப்பிடுவர் அதனால் இந்த அளவு).,
மிளகாய் தூள் - கோபுரமாக நான்கு அல்லது ஐந்து டீஸ்பூன். (உங்கள் காரத்துக்கு ஏற்ப) (குழம்பு மிளகாய் தூள் ரெசிபி தனியாக போடுகிறேன்).,
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்.,
உப்பு - தேவைக்கு.,
கறி வடகம் - ஒரு சிறு துண்டு இது இல்லை எனில் கடுகு, சீரகம், வெந்தயம் தலா ஒரு ஸ்பூன்.,
நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணைய்.,
கருவேப்பிலை, கொத்தமல்லி ஒரு கைப்பிடி....
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தேவையான நீர் விட்டு புளியை கரைக்கவும். இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், அரைத்து வைத்த பூண்டு மிளகு கலவை, மற்றும் உப்பு போட்டு நன்கு கலக்கவும்.
இதில் உப்பு, புளி, காரம் சரி பார்க்கவும். புளியின் சுவை அதிகமாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து விட்டு மிளகாய் தூள் சேர்க்கவும். நாக்கில் வைக்கும் போது உங்களுக்கு சுள் என்று காரம் ஏற வேண்டும். குழம்பை சாப்பிடும் போது உங்களுக்கு நாக்கில் காரம் தெரியாமல் தொண்டையில் இறங்கும் பொது காரம் தெரிந்தால் அதுவே சிறந்த மீன் குழம்பு பக்குவம்.
ஒரு மண் சட்டியில் மூன்று குழி கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் கறி வடகம் அல்லது கடுகு, சீரகம், வெந்தயம் போட்டு நன்கு வறுக்கவும். இதில் பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் இதில் பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் இதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் இதில் புளி கரைசலை சேர்த்து ஒரு மூடி போட்டு நன்கு பத்து நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் திரும்பவும் உப்பு காரம் சரி பார்த்து இதில் மீனை போடவும். அதிகம் கிளறக் கூடாது. மீன் வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தழை தூவி ஒரு தட்டு போட்டு மூடி அப்படியே ஒரு அரைமணி நேரம் வைத்து விடவும்.
சுவையான காரப்பொடி பூண்டு மிளகு குழம்பு தயார்.
குறிப்பு:
இந்த பக்குவத்தில் வெள்ளை சுதும்பு, நகரை மீன், காரப்பொடி வெள்ளை சுதும்பு கலந்து, திருக்கை, சுறா ஆகிய மீன்கள் போட்டும் இந்த குழம்பை வைக்கலாம். சைவர்கள் இதில் கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, வாழைக்காய் சேர்த்து செய்யலாம்.
சளி அதிகமாக இருந்தால் தூதுவளை கீரையை அரிது விழுதாக்கி இந்த குழம்பில் கொதிக்கும் பொது சேர்த்து கொடுக்கலாம். இது காரமாக சாப்பிட வேண்டிய உணவு. உங்களுக்கு தேவையான தாங்கும் அளவுக்கு காரத்தை நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதை காரப்பொடி கருவாடிலும் இதே போல் செய்யலாம்.
நன்றி., விஜிபிரியா விஜிகிட்சன்
English Summary
how to cook karapodi fish kulampu in home