திருவிழா : சிலம்பாட்டம் எவ்வாறு ஆடப்படுகிறது? வகைகள் என்ன?
silambattam history and details in tamil
சிலம்பாட்டம்:
சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர்.
சிலம்பம் உருவான வரலாறு :
ஆதிகாலத்தில் மனிதர்கள் விலங்குகளிடமிருந்து பாதுகாத்து கொள்ள ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் வரலாற்றுமிக்க பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் 'சிலம்பு" ஆகும். தற்போது சிலம்பாட்டம் ஒரு சில பள்ளிகளிலும், தனியார் அமைப்புகளாலும் கற்றுத் தரப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வீர விளையாட்டாகவும் சிலம்பாட்டம் இடம்பெறுகிறது.
சிலம்பம் பெயர் காரணம் :
சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும்போது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
சிலம்பாட்ட வகைகள் :
துடுக்காண்டம், குறவஞ்சி, மறக்காணம், அலங்கார சிலம்பம், போர் சிலம்பம், பனையேறி மல்லு, நாகதாளி, நாகசீறல், கள்ளன்கம்பு ஆகியன சிலம்பாட்ட வகைகளாகும்.
சிலம்பாட்டம் எவ்வாறு ஆடப்படுகிறது?
சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலை சிலம்புக் கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாக உள்ளது. சிலம்பாட்டத்தை கற்றுக் கொள்ள குறைந்தது ஆறு மாதம் தேவை.
சிலம்பாட்டம் ஆடுவதற்கு குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்ட போட்டிகளில் விளையாடுவார்கள். தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர்.
திருவிழா, கோயில் விழாக்கள் மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும். இக்கலை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமளவு நடக்கிறது.
சிலம்பத்தடி :
சிலம்பம் ஆட்டத்திற்கான கம்பு அல்லது தடி மூங்கில் இனத்தைச் சேர்ந்த சிறுவாரைக் கம்பு, பிரம்பு போன்ற மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் சிறுவாரைக் கம்பு என்பது நன்கு வளைந்து கொடுக்கக்கூடியது. சிலம்பத்திற்கான தடி, நிலத்தில் இருந்து ஓர் ஆளின் நெற்றிப் புருவம் வரையான உயரமுடையதாக இருக்க வேண்டும்.
சிலம்பாட்ட சுற்று முறைகள் :
சிலம்பாட்டத்தில் 72க்கும் மேற்பட்ட வகைகளில் சுற்றும் முறைகள் உள்ளன.
சுருள் கத்தி, தீப்பந்தம், அடிவருசு, தொடுபுள்ளி, பிச்சுவாப் பிடிவரிசை, கோடாலிக் கேடயம், வேல்கம்பு, சுருள், வாரல், முன்வெட்டு, பின்வெட்டு, இடையறுப்பு, மேலறுப்பு, மலார், பின்னுருட்டு, முன்னுருட்டு போன்றன சில சுற்று முறைகளாகும்.
பயன்கள் :
சிலம்பாட்டம் என்பது சிறந்த உடற்பயிற்சியாகும். கம்பு எடுத்து சுழற்றும்போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி, நரம்பு மற்றும் தசைகளும் இயக்கப்படுகின்றன.
கம்பைக் கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றிலும் சுழற்றி சுற்றும்போது தம் உடலை சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும்.
உடலின் வலிமை, ஆற்றல், விரைவுத்திறன், உடல் நெகிழ்தன்மை (கடநஒiடிடைவைல) ஆகியவற்றை அடைய சிலம்பப் பயிற்சி உதவுகிறது.
English Summary
silambattam history and details in tamil