ரூ.725 கோடி: ஸ்டாலினின் இரட்டை வேடம் அம்பலம்! சீரழியும் தமிழகம் - அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
PMK Anbumani Ramadoss condemn to DMK Govt MK Stalin TASAMC
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளையொட்டி, கடந்த 13, 14, 16 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் வாயிலாக மட்டும் ரூ.725 கோடிக்கு மது விற்பனையாகியிருப்பதாகவும், இது கடந்த ஆண்டின் விற்பனை அளவான ரூ.678.65 கோடியை விட ரூ.47 கோடி அதிகம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும் செய்தி இல்லை என்றும், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் இன்னும் அதிக குடும்பங்கள் கண்ணீர் வடித்திருக்கின்றன என்பதையே இந்த செய்தி காட்டுவதாக பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பது தான் மருத்துவர் அய்யா அவர்களின் நோக்கம் அதற்காகத் தான் அவர் கடந்த 45 ஆண்டுகளாக போராடி வருகிறார். ஆனால், தமிழ்நாட்டை ஆள்பவர்களோ, தமிழ்நாட்டில் ஒருவர் கூட மது குடிக்காதவர்களாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், அனைவரையும் மதுவுக்கு அடிமையாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் விளைவு தான் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மது வணிகம் கடுமையாக அதிகரித்திருக்கிறது.
கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பணம் வழங்கப்படவில்லை. ஆனாலும், மது வணிகம் ரூ.47 கோடி அதிகரித்திருக்கிறது என்பதன் மூலம் மது குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தமிழ்நாட்டு இளைஞர்களை நிரந்தர குடிகாரர்களாக்கியது மட்டும் தான் திராவிட மாடல் அரசின் சாதனை ஆகும்.
ஒரு புறம் போதையின் பாதையில் யாரும் போகக் கூடாது; தீமை என்று தெரிந்தும் அதை விலை கொடுத்து வாங்கலாமா? என்று ஒரு புறம் தொலைக்காட்சி விளம்பரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முழங்கிக் கொண்டிருக்கிறார். இன்னொருபுறம் பொங்கல் திருநாளில் கூட மதுக்கடைகளை திறந்து வைத்து இளைஞர்களையும், மாணவர்களையும் மதுவுக்கு அடிமையாக்கி வருகிறார். இத்தகைய இரட்டை வேடத்தை மு.க.ஸ்டாலின் அவர்களைத் தவிர வேறு எவராலும் நடிக்க முடியாது.
கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தான் மது விற்பனை மிக அதிகமாக உயர்ந்திருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. பத்தாம் வகுப்பு. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்தில் இந்த மாவட்டங்கள் தான் கடைசி இடத்தில் இருக்கின்றன. அந்த மாவட்டங்களை கல்வியில் உயர்த்துவதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்காத திமுக அரசு, அந்த மாவட்டங்களை மதுவில் மூழ்கடிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் மூலைக்கு மூளை கஞ்சாவும், மதுவும் தான் தாராளமாக கிடைக்கின்றன. அதனால் தமிழ்நாடு சீரழிவை நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்ற தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். கஞ்சா புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss condemn to DMK Govt MK Stalin TASAMC