சி.வி சண்முகம் மீதான 6 வழக்குகள் ரத்து! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
6 cases against CVeShanmugam canceled by ChennaiHC
தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்தும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நடைபெற்ற போராட்டம், சாலை மறியல், அதேபோன்று விழுப்புரம் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்திற்கு எதிராக போராடியது உள்ளிட்ட போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக தமிழக அரசு அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி சண்முகம் மீது 12 வழக்குகள் பதிவு செய்தது.
இந்த நிலையில் கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.வி சண்முகம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது சி.வி சண்முகம் தரப்பு வழக்கறிஞரின் வாதம் முடிவடைந்த நிலையில் 2 வழக்குகளில் தமிழக காவல்துறை பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். சி.வி சண்முகத்திற்கு எதிராக 3 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் விசாரண நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
அதேபோன்று சி.வி சண்முகத்திற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத 6 வழக்குகளை ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஒரு வழக்கை சி.வி சண்முகம் திரும்ப பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட போது நடைபெற்ற போராட்டத்தில் நீதிபதி ஆளுங்கட்சியால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும் மிரட்டப்பட்டுள்ளதாகவும் சி.வி சண்முகம் பேசியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி அரசியல் போராட்டங்களில் ஏன் தேவையில்லாமல் நீதித்துறையை இழுக்கிறீர்கள்? நீதிபதி அச்சுறுத்தப்பட்டு இருக்கிறார் மிரட்டப்பட்டு இருக்கிறார் என்று எவ்வாறு கூற முடியும்?
உங்கள் அரசியலுக்காக நீதிமன்றத்தை இழக்காதீர்கள். எந்த கட்சி என்று நீதிமன்றம் பார்ப்பதில்லை. நீதித்துறையை பொருத்தவரையில் ஒரே அரசுதான் என அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.
English Summary
6 cases against CVeShanmugam canceled by ChennaiHC