தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது நல்லதல்ல - எச்சரிக்கும் டாக்டர் இராமதாஸ்!
PMK Ramadoss Condemn to DMK Govt Law and Order issue Woman safety
பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கோவையில் இருந்து திருப்பதி சென்ற விரைவுத் தொடர்வண்டியில் பயணம் செய்த கருவுற்ற பெண்ணுக்கு மனித மிருகம் ஒன்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதை அந்தப் பெண் கண்டித்ததால் ஆத்திரமடைந்த அந்த மிருகம், அப்பெண்ணை வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் தொடர்வண்டியிலிருந்து தள்ளி விட்டு கொலை செய்ய முயன்றதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
அதேபோல், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனியார் பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பள்ளியின் அறங்காவலர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுவதும் செய்தியும் வேதனையளிக்கிறது. பள்ளியாக இருந்தாலும், தொடர்வண்டியாக இருந்தாலும் பெண்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க முடியாது என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் மாணவி ஒருவர் ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, சென்னை கிளாம்பாக்கத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளால் ஏற்பட்ட அதிர்ச்சியும், வேதனையும் விலகுவதற்கு முன்பாகவே இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நடப்பது மிகவும் வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது நல்லதல்ல.
தமிழ்நாட்டில் எத்தகைய குற்றங்களைச் செய்தாலும் அதிலிருந்து எளிதாக தப்பி விடலாம் என்ற துணிச்சல் குற்றவாளிகளுக்கு ஏற்பட்டிருப்பது தான் இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் ஆகும். தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடையின்றி கஞ்சா விற்கப்படுவதும் இதற்கு இன்னொரு காரணம் ஆகும்.
பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை உடனடியாக பெற்றுத்தர வேண்டும்; அவர்கள் மீதான வழக்கு விசாரணை முடியும் வரை அவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது. பேருந்து நிலையங்கள், தொடர்வண்டிகள் ஆகியவற்றில் காவல்துறை பாதுகாப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Ramadoss Condemn to DMK Govt Law and Order issue Woman safety