தான் ஒரு நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் என்று மீண்டும் நிரூபித்த ஸ்டாலின் - எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்!  - Seithipunal
Seithipunal


தகுந்த முன் அறிவிப்பின்றி சாத்தனூர் அணையிலிருந்து வினாடிக்கு 1.68 லட்சம் கனஅடி தண்ணீரைத் திறந்து கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட மக்களை கடும் துயரத்திற்குள்ளாக்கிய ஸ்டாலினின் திமுக அரசுக்கு, அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக பருவ மழை மற்றும் ஃபெஞ்சல் புயலினால் தொடர்ந்து கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத் திறனற்ற திரு. ஸ்டாலினின் திமுக அரசு, எவ்வளவு புயல், மழை வந்தாலும் தடுப்பு நடவடிக்கைகள் தயார் என்று ஊடகங்களில் வெற்று விளம்பரங்கள் செய்ததை நம்பி இன்று, லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஃபெஞ்சல் புயல்' காரணமாக கன மழை பெய்யும் என்று தொடர்ந்து பல்வேறு எச்சரிக்கைகளை உடனுக்குடன் வெளியிட்டு, மாநில அரசை எச்சரித்து வந்தது. ஆனால், நிர்வாகத் திறனற்ற ஸ்டாலினின் விடியா திமுக அரசு, வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் செய்த மாவட்டங்களில் எந்தவிதமான வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யாமலும், நிவாரண முகாம்களை அமைக்காமலும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும் இருந்ததன் விளைவாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த மூன்று நாட்களாக கனமழை, வெள்ளம் போன்றவற்றால் தங்களது விளை நிலங்கள் சேதமடைந்ததோடு, தங்களது உடைமைகள், கால்நடைகள் மற்றும் வாகனங்களை இழந்து, உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

நிர்வாகத் திறனற்ற ஸ்டாலினின் விடியா திமுக அரசு, சாத்தனூர் அணையில் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்துக்கொண்டிருந்த போதே, தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும். குறிப்பாக, 2.12.2024 அன்று அதிகாலை 2.30 மணியளவில் எவ்வித முன்னறிவிப்புமின்றி சாத்தனூர் அணையிலிருந்து வினாடிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டபடியால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் இருந்த கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பல கிராமங்களில் வெள்ள நீர் புகுந்து மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

இன்று தங்களது வாழ்வாதாரங்களை இழந்து மக்கள் நிற்கதியாக உள்ளனர். விழுப்புரம் நகரம் மற்றும் கடலூர் நகரங்களில், தென்பெண்ணையாற்றின் வெள்ள நீர் புகுந்ததால் குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
இந்திய வானிலை ஆய்வு மையம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்ளுக்கு ரெட் அலர்ட் வெளியிட்ட பிறகும், திரு. ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தினால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், வெள்ள நீரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் தமிழ் நாடு முழுவதும் எவ்வளவு மழை பெய்தாலும், அதை எதிர்கொண்டு மக்கள் பாதிப்படையாமல் பார்த்துக்கொள்வோம் என்று ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியிட்டார்கள். ஆனால், சென்னையைத் தவிர்த்து வேறு எந்த மாட்டங்களிலும் வெள்ள பாதிப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தினால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இனியாவது மக்களை ஏமாற்றாமல், இந்தியா வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது வெளியிடும் அறிவிப்புகளின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும். சாத்தனூர் அணையிலிருந்து எவ்வித முன்அறிவிப்புமின்றி சுமார் 1.68 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிட்டதன் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு, எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இந்த அரசு அறிவித்துள்ள நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென்றும்; கால்நடைகள், வாகனங்களை இழந்துள்ளவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும்; மேலும், வெள்ளத்தால் மூழ்கி பாதிப்படைந்த நெல் மற்றும் பல்வேறு பயிர்களை வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன். மீண்டும் ஒருமுறை, தான் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் என்பதை ஸ்டாலின் நிரூபித்துள்ளார்.

உடனடியாக, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்கவும்; மீட்பு நடவடிக்கைகளில் விரைந்து ஈடுபட்டு மக்களைக் காப்பாற்றவும், ஸ்டாலினின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Condemn to DMK Govt MKStalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->