நடுவுல சிக்கிட்டோம்! அதைப் பற்றி எல்லாம் கேட்கவே இல்லை - எடப்பாடிக்கு எதிராக குமுறிய செல்லூர் ராஜு!
ADMK EPS vs Sellur Raju
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குறித்த செய்திகளும், தகவல்களும் அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலைக்கு செல்கிறதோ என்ற விவாதத்தை சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு ஒவ்வொரு தொகுதி வாரியாக கட்சியின் நிர்வாகிகள, முன்னாள் அமைச்சர்களிடம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அண்மையில் மதுரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிச்சாமியிடம், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பல்வேறு புகார்களை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜுவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பவே அதற்கு அவர் அளித்த பதிலில், 8000 கோடிகளுக்கு மேல் நிதிகளை வாங்கி மதுரைக்கு சென்றார்கள், ஆனால் யாரும் ஓட்டு போடவில்லை என்று கேள்வி கேட்கிறார்கள்.
நான் என்ன காமராஜரா, புரட்சித்தலைவர் எம்ஜிஆரா? அல்லது ஜெயலலிதாவா? நானும் கூவி கூவி தான் பார்க்கிறேன். வேகாத வெயிலில் தெரு தெருவாக சென்று தான் வாக்கு கேட்டோம். கழகத் தொண்டர்களும் பம்பரமாக சுற்றி சுற்றி வேலை செய்தார்கள். இதற்கு மேல் கட்சியில் எப்படி வேலை பார்க்க முடியும்.
எதிர்கட்சி மட்டும்தான் வேலை பார்த்தார்களா? எல்லாருமே நன்றாகத்தான் வேலை பார்த்தார்கள். ஒரு குறிப்பிட்ட சமுதாயம், இந்தியாவை யார் ஆள வேண்டும் அப்படி என்ற வகையில் மோடிக்கு ஓட்டு போட்டுள்ளார்கள்.
மதசார்பற்ற சிறுபான்மையினர், தலித் மக்கள் ராகுல் காந்தியை கொண்டு வர நினைத்து வாக்களித்தார்கள். இதற்கிடையில் நாங்கள் அடிபட்டு விட்டோம். அவ்வளவுதான். இது தமிழ்நாடு முழுவதும் பிரதிபலித்தது.
மதுரை மாநகராட்சியில் மட்டும் அல்ல, ஒரு சில தொகுதிகளாக நாங்கள் அதிக ஓட்டுகளை வாங்கி இருக்கிறோம். இரண்டாவது இடம் கூட வந்திருக்கிறோம். மற்ற இடங்களில் இதைத் தாண்டியும் குறைவாக உள்ளது. அதைப் பற்றி எல்லாம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசவே இல்லை. அனைவருக்கும் ஆலோசனை வழங்கினார். ஆனால் மற்றபடி வேற எதுவும் இல்லை. பத்திரிகைகளில் அரைப்பக்கம் போடும் அளவிற்கு ஒரு சம்பவம் நடக்கவில்லை.
மதுரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை. எங்களுக்கே இந்த தேர்தல் முடிவு மன உளைச்சல் தான். ஆனால் மக்கள் வேறு விதமாக முடிவு எடுத்து விட்டார்கள்.
சேட்டு, வட இந்தியர்கள், பிராமிணர்கள் மற்றும் சில சமூகங்கள் இந்தியாவை பிரதமர் மோடி தான் ஆள வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். அதேபோல் சிறுபான்மையினர் எங்கள் மீது இன்னும் நம்பிக்கை கொள்ளவில்லை. நாங்கள் எவ்வளவு தூரமோ அவர்களிடம் எடுத்துரைத்தோம். அவர்களுக்கு நல்லது தான் செய்கிறோம்.
எனவே இது போன்ற வாக்குகள் தான் அவர்களின் வெற்றிக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை" என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.