அப்படி நடந்தால் எங்க கை என்ன பூப்பறித்துக்கொண்டு இருக்குமா? ஈபிஎஸ்-யை சந்தித்தபின் கொந்தளித்த ஜெயக்குமார்.!
ADMK JEYAKUMAR PRESSMEET AT EPS HOME
ஒற்றை தலைமையா., இரட்டை தலைமையா., என்பது குறித்து சுமுக முடிவு எடுக்கப்படும் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்ததாவது,
"அதிமுகவில் ஒற்றை தலைமை, இரட்டை தலைமை பற்றி சுமூக முடிவு எடுக்கப்படும். இது குறித்து நான் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. அதெல்லாம் கட்சி எடுக்கின்ற முடிவுதான்.
ஒருங்கிணைப்பாளர், இணை, துணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் தான் அதிமுகவின் தலைமை குறித்து முடிவெடுக்க முடியும்" என்று தெரிவித்தார்.
மேலும், "அதிமுகவில் விருப்பு, வெறுப்புக்கு எந்த இடமும் இல்லை. அது தவிர்க்கப்பட வேண்டும். நேற்றைய தினம் என்னை யாரும் முற்றுகையிட வில்லை. எனது காரையோ., என்னையோ யாரும் தாக்கவில்லை. அப்படி அவர்கள் தாக்கியதாக நீங்கள் தான் செய்தியை பிரம்மாண்டமாக போட்டு விட்டீர்கள்.
அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்தால் எங்களுடைய கைகள் என்ன பூ பறித்துக் கொண்டிருக்குமா? வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. அனைத்துமே சுமுகமாக நடந்து கொண்டிருக்கிறது.
ஒரு சில தொண்டர்கள் ஆவேசப்பட்டு ஒன்றிரண்டு வார்த்தைகள் சொல்லி இருப்பார்கள். அதனை நீங்கள் பெரிதுபடுத்தி பிரம்மாண்டமான செய்தியைப் போட்டு உள்ளீர்கள். எனக்கு சிரிப்பாகத்தான் இருக்கிறது" என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
இன்று காலை முதலே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செல்லும் இடமெல்லாம் அவரின் ஆதரவாளர்கள் "அண்ணன் டிஜெ (DJ) வாழ்க., அண்ணன் DJ வாழ்க.," என்று கோஷமிட்டு வருகின்றனர்.
English Summary
ADMK JEYAKUMAR PRESSMEET AT EPS HOME