தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி மீது அதிமுக பரபரப்பு புகார்! காரணம் என்ன.?
AIADMK complains against Dindigul Leoni
திமுகவின் தலைமை கழகத்தின் பேச்சாளராக இருந்த திண்டுக்கல் லியோனி தற்போது தமிழ்நாடு அரசின் பாடநூல் கழக தலைவராக மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் சென்னை கிழக்கு மாவட்டம் திருவெற்றியூரில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் பேசியதாக தனியார் தொலைக்காட்சியில் ஜூலை 21ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டது.
அதில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை குறித்து அவதூறான கருத்தை பேசியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக தரப்பில் மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல செயலாளர் ராஜ்சத்யம் தலைமையிலான அதிமுகவினர் மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் "கடந்த 21/08/2023 அன்று சத்யம் தனியார் தொலைக்காட்சியை பார்த்த போது அதில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு அம்மா அவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வண்ணம் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியில் பணிகள் கழகத்தின் தலைவர் திரு ஐ.லியோனி பேசுவதை கண்டேன்.
இந்த பேச்சானது திமுகவின் சென்னை கிழக்கு மாவட்ட திருவெற்றியூர் மேற்கு பகுதியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசியதாக அறிய முடிகிறது. இவருடைய பேச்சானது வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவும், இரு குழுக்களுக்கும் இடையில் மோதல் உருவாகும் விதமாகவும், பெண்மைக்கு களங்கம் விளைவிக்கும் விதமாகவும் அவதூறாக பேசியுள்ளார்.
மாண்புமிகு அம்மா அவர்களின் புகழுக்கு பொது மேடையில் புத்தகம் விளைவிக்கும் விதமாக பேசியதற்கும், அனைத்து சமூக ஊடகங்களிலும் வெளியிட்டமைக்கும், ஐ.லியோனி மீது தகுந்த குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும், கடும் தண்டனை பிரிவுகளின் கீழ் வழக்கு பதியுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த 28/04/2023 அன்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் ரீட் மனு எண்: 943/ 2021 என்ற வழக்கில் வெறுப்பு பேச்சு பேசுபவர்கள் மீது புகார் மனுவிற்காக காத்திருக்காமல் காவல்துறையினர் தாமாகவே முன்வந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
மேலும் நடவடிக்கை எடுக்க தவறும் காவல்துறையினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உட்படுவார்கள் என உத்தரவிட்டுள்ளது. ஆகவே திரு ஐ.லியோனி மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 153-ஏ, 153-பி, 295-ஏ மற்றும் 505-ன் படி நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இந்த அவதூறு பேச்சை உள்ளடக்கிய அனைத்து சமூக ஊடக பதிவுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என அந்த புகார் மனுவில் அதிமுக மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராஜ்சத்யன் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
AIADMK complains against Dindigul Leoni