#BREAKING:: துரைமுருகன் குறித்தான அவதூறு வழக்கில் அதிமுக நிர்வாகிக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்..!!
AIADMK executive got bail in defaming case
திமுக அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகிக்கு ஜாமீன் வழங்கியது காட்பாடி நீதிமன்றம்..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேசியதை பொள்ளாச்சியைச் சேர்ந்த அதிமுக ஐடி விங் நிர்வாகி அருண்குமார் என்பவர் சமூக வலைதளத்தில் அவதூராக புகைப்படத்தை சித்தரித்து அதில் "கோபாலபுரம் கொத்தடிமை" என்ற வார்த்தையுடன் பதிவிட்டிருந்த புகைப்படம் அடிப்படையில் காட்பாடி காவல் நிலையத்தில் திமுகவைச் சேர்ந்த நபர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த ஏப்ரல் 5ம் தேதி அருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் அதிமுக நிர்வாகி அருண்குமாரின் ஜாமீன் மனு இன்று காட்பாடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதிமுக சார்பில் அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான இன்பதுரை ஆஜரானார்.
இந்த வழக்கின் விசாரணையின் முடிவில் அதிமுக ஐடி விங் நிர்வாகி அருண்குமாருக்கு ஜாமீன் வழங்கி காட்பாடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் இன்பதுரை பேசியதாவது "காட்பாடி காவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பாக அருண்குமாரை கைது செய்துள்ளனர்.
அதிமுக நிர்வாகி அருண்குமாரால் அந்த பதிவு எழுதப்படவில்லை. சட்டப்படி அருண்குமாருக்கு 41ஏ நோட்டீஸ் வழங்கப்பட்டு இருக்க வேண்டும். அதாவது 7 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை உள்ள குற்ற வழக்குகளில் நோட்டீஸ் கொடுத்துவிட்டு தான் அவரை விசாரிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே அருணேஷ்குமார் வழக்கில் தெளிவாக கூறியுள்ளது.
அதனை பின்பற்றாமல் காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்ததாக வாதிட்டோம். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி தற்பொழுது அவருக்கு ஜாமீன் அளித்துள்ளார். எனவே அவர் நாளை காலை ஜாமீனில் விடுதலையாகி வெளியே வருவார்.
உண்மையில் அதை பதிவிட்டவர் திமுகவை சேர்ந்த இன்னொரு நபர், அவரை காவல்துறை கைது செய்யவில்லை. இந்த குற்றச்சாட்டில் பாதிக்கப்பட்ட துரைமுருகன் தான் புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால் சம்பந்தமில்லாத வன்னி ராஜா என்பவர் புகார் அளித்துள்ளார்.
சட்டத்தில் அவ்வாறான வழி வகைகள் எதுவும் இல்லை. அவ்வாறு புகார் அளிக்க வேண்டும் என்றால் துரைமுருகன் அவருக்கு உரிமை வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் வழங்கப்படவில்லை என்பதை நீதிபதியிடம் எடுத்துக் கூறினோம். மேலும் காவல்துறையினரால் பெறப்பட்ட புகாரில் புகார் அளித்தவரின் பெயரே இல்லை. எந்த ஒரு சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் இந்த அரசு செயல்பட்டுள்ளது.
எனவே இது சட்டவிரோதமான காவல் மற்றும் உச்ச நீதிமன்ற விதிகளுக்கு எதிரானது. எங்கள் தலைமையுடன் ஆலோசனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்" என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி உள்ளார்.
English Summary
AIADMK executive got bail in defaming case