ஸ்டாலின் ஆளுமை அல்ல! வெத்து விளம்பரம்! போட்டு தாக்கிய அதிமுக தரப்பு!!
AIADMK kovai sathyan criticized DMK MKStalin
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டாம் நாள் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக சிறைகளில் நீண்ட காலமாக தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வது குறித்தான கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே நடைபெற்ற விவாதத்தினால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனல் பறந்தது. ஆனால் தொலைக்காட்சிகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய காணொளி மட்டும் நேரலையில் ஒளிபரப்பப்படவில்லை.
நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது அதிமுக அரசு இஸ்லாமியர்களின் நலனுக்காக ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியதற்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்க சபாநாயகர் அனுமதி வழங்காததால் அதனை கண்டித்து வெளிநடப்பு செய்திருந்தனர்.
இதனால் அதிமுக மற்றும் திமுக தரப்புக்கு இடையே நேற்று முதல் சமூக வலைதளங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் "இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் அதிமுக - பிஜேபி!
பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த எடப்பாடி பழனிசாமியின் நாடகங்களை கண்டு ஒருபோதும் ஏமாற மாட்டோம் என இஸ்லாமிய சகோதரர்கள் கருத்து"என காணொளியுடன் பதிவிடப்பட்டது.
அதற்கு அதிமுக ஐடி விங் மாநில இணைச் செயலாளர் கோவை சத்யன் "2016 - 21 வரை 15 இஸ்லாமியர்கள் விடுதலை. மத்திய அரசு ஹஜ் மானியம் நிறுத்தியபோதும் அதை தொடர்ந்து அளித்த அரசு எடப்பாடியார் அரசு. ரமலான் விலையில்லா அரிசி. 3.5% உள்ஓதுக்கீடு. ஆளுமை என்பது சொல் அல்ல செயல். ஸ்டாலின் வெத்து விளம்பரம் ஆளுமை அல்ல. திமுக தகவல் தொழில்நுட்ப அணி கதறவும்" காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
AIADMK kovai sathyan criticized DMK MKStalin