பி.டி.ஆர் ஆடியோ விவகாரம்.. மத்திய அரசு "உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்".. அமித் ஷாவிடம் அதிமுக வலியுறுத்தல்..!!
AIADMK urges Amit Shah in PTR leaks audio issue
மத்திய அமைச்சர் அமைச்சவுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களின் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது குறித்தான ஆடியோ வெளியாகி உள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் பேசினீர்களா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அவர் "தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோவில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு நிதி அமைச்சரே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் 30,000 கோடி ஊழல் செய்ததாக பேசிய ஆடியோ செய்திகளாக வெளியாகி உள்ளது.
இவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அதே போன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டாவது ஆடியோ வெளியாகி உள்ளது. அதிலும் ஒரு சிலர் கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த விவகாரத்தை முழுமையாக விசாரணை செய்ய வேண்டும். அதற்காக வெட்டி ஒட்டி ஆடியோ வெளியிட்டிருப்பதாக விளக்கம் அளித்துள்ளார். அது வெட்டி ஓட்டி வெளியிடப்பட்டதா என்பது குறித்து நமக்கு தெரியாது. இந்த ஆடியோ குறித்தான செய்தி வெளியாகி மூன்று நாட்களாகியும் நாங்கள் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
அதன் பிறகு செய்தித்தாள்களில் வந்த பிறகுதான் இதில் ஏதேனும் உண்மை இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தை உரிய விசாரணை நடத்தி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை பேசியிருப்பது சாதாரண நபர் அல்ல ஒரு நிதி அமைச்சரே பேசியுள்ளார். எனவே இந்த விவகாரத்தை பொருட்படுத்தாமல் விட்டு விடக்கூடாது.
திமுக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒரு அமைச்சரே 30 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளதாக பேசியுள்ளார். நேற்று மத்திய அமைச்சரிடம் பேசும் பொழுது கூட இது குறித்து பேசினோம். அவரும் இந்த ஆடியோ விவகாரம் குறித்தான செய்தியை பார்த்ததாக கூறியுள்ளார்.
எனவே இந்த விவகாரத்தை உரிய முறையில் ஆய்வு செய்து உண்மை தன்மையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மத்திய அமைச்சருடனான சந்திப்பில் வலியுறுத்தியுள்ளோம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
English Summary
AIADMK urges Amit Shah in PTR leaks audio issue