24 மணிநேரம் ஆகிவிட்டது.. இன்னும் நடவடிக்கை இல்லை! பின்னணியில் இவர்கள் தான் - அறப்போர் இயக்கம் கண்டனம்!
Arappor Iyakkam strongly condemns the attack on Savukku Shankars house
சவுக்கு ஷங்கர் மற்றும் அவரது தாயார் மீதான வன்முறை மற்றும் அருவருப்பான தாக்குதலை அறப்போர் இயக்கம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அதன் செய்திக்குறிப்பில், "இப்படி ஒரு இழிவான செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால் சம்பவம் நடந்து 24 மணி நேரம் ஆகியும் கூட தாக்குதல் மற்றும் இந்த இழிவான செயல்களை செய்தவர்கள் மீது நாம் எந்தவித சட்ட நடவடிக்கையும் பார்க்கவில்லை என்றால் அரசுக்கும் அரசில் இருக்கின்ற அதிகாரம் படைத்தவர்களுக்கும் இந்த தாக்குதலிலோ அல்லது தாக்கியவர்களை காப்பற்றுவதிலோ பங்கு உள்ளது என்று தான் புரிந்து கொள்ள முடிகிறது.
இது போன்ற தாக்குதல் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலம் தமிழ்நாடு அரசு நம்மை ஒரு அநாகரீகமான சமூகத்தை நோக்கி எடுத்து செல்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் வன்முறையையும் வீடு புகுந்து சேதப்படுத்துவதையும் ஊக்குவிப்பது போல் உள்ளது.
வன்முறை/பொருள் சேதம் செய்பவர்களை காப்பாற்றுதல், பேச்சுரிமை கருத்துரிமையை முடக்குதல் போன்ற அரசின் தொடர் செயல்பாடுகள் அரசியல் சாசனத்தை துளி அளவும் தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மதிப்பதில்லை என்பதை காட்டுகிறது.
இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் அதன் மூளையாக செயல்பட்டவர்கள் மீதும் அவர்களை காப்பாற்றும் வகையில் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்த காவல்துறை அதிகாரிகள் மீதும் கிரிமினல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
Arappor Iyakkam strongly condemns the attack on Savukku Shankars house