குடியரசு தின விழா நிகழ்ச்சி - அலங்கார ஊர்திகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பரிசு.!
chief minister mk stalin gift to decorate floats participate in republic day fuinction
நேற்று நாடு முழுவதும் குடியரசு தின விழா நடைபெற்றது. அந்த வகையில், சென்னை காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், டாக்டர் நாராயண சாமி நாயுடு வேளாண்மை விருது, சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் கோப்பைகள் உள்ளிட்ட பதக்கங்களையும், கோப்பைகளையும் வழங்கி சிறப்பித்தார்.
இதைத் தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளையும், தஞ்சாவூர்-தென்னக பண்பாட்டு மையம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளையும், பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பினை பார்வையிட்டார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், குடியரசு நாள் விழாவில் நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களின் கலை நிகழ்ச்சியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு கேடயங்களை வழங்கி வாழ்த்தினார்.
மேலும், குடியரசு நாள் விழாவில், அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில், முதல் மூன்று இடங்களை பெற்ற அலங்கார ஊர்திகளுக்கு கேடயங்களை வழங்கி சிறப்பித்தார்.
இந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், பொதுத்துறை துணைச் செயலாளர் (மரபு) பத்மஜா, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், அரசு உயர் அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
English Summary
chief minister mk stalin gift to decorate floats participate in republic day fuinction