அலட்சியத்தின் உச்சியில் திமுக அரசு, மரணத்தின் பிடியில் மக்கள்! பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கண்டனம்!
BJP MLA Vanathi Srinivasan condiment to DMK Govt MK Stalin
சென்னையில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதில் 3 பேர் உயிரிழந்ததாகவும் கிட்டத்தட்ட 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியாகியுள்ள செய்தி இந்த திராவிட மாடல் அரசின் நிர்வாக லட்சணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "அன்று சரியான திட்டமிடலின்றி சாத்தனூர் அணையைத் திறந்துவிட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திமுக, இன்று முறையான வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மேலும் பல உயிர்களைப் பலியாக்கியுள்ளது கடும் கண்டனத்திற்குறியது.
குடிநீரில் பிரச்சினை இருந்தால் பகுதி மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டு இருக்கவேண்டுமே என்று கேட்கும் திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன், இன்னும் பல உயிர்கள் போகவில்லையே என்று மறைமுகமாக வருந்துகிறாரா? அல்லது மக்கள் உயிர்களுக்கு அவர் தரும் மதிப்பு அவ்வளவுதானா?
சுகாதாரமற்ற சூழலில் மக்கள் தவிக்கையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் எங்கே? உதயநிதியின் உதயநாள் கொண்டாட்டம் அவருக்கு இன்னும் முடியவில்லையா?
மக்களின் அடிப்படைத் தேவையான “சுத்தமான குடிநீர்” மற்றும் “சுகாதாரமான சுற்றுப்புறம்” ஆகியவற்றைக் கூட பூர்த்தி செய்ய முடியாத முக ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழக மக்களின் ஆரோக்கியத்தைப் பற்றிய அக்கறையில்லையா?
இவ்வாறு பொறுப்பற்ற திமுக அரசின் கவனக்குறைவால் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், தமிழகத்தில் தரமான குடிநீர் கிடைப்பதற்கு வழிவகை செய்யுமாறும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
English Summary
BJP MLA Vanathi Srinivasan condiment to DMK Govt MK Stalin