ஊருக்கு உபதேசம் செய்யும் கனிமொழி அவர்களே! தெருவுக்குத் தெரு டாஸ்மாக்! உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை - வானதி சீனிவாசன் பதிலடி!
BJP Vanathi reply to DMK Kanimozhi
ஊருக்கு உபதேசம் செய்யும் கனிமொழி அவர்களே, “சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைத்தால் மட்டும் போதாது அவரின் வார்த்தைகளைப் பின்பற்றுங்கள்” எனக் கொந்தளிக்கும் நீங்கள், கள்ளுண்ணாமையை போதித்த அய்யன் வள்ளுவனுக்கு வானளவு பெரிய சிலையை வைத்துவிட்டு தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடையைத் திறந்து வைத்திருக்கும் உங்கள் சொந்தக் குடும்பத்தை முதலில் தட்டிக் கேளுங்கள் என்று, பாஜக தேசிய மகிளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், கனிமொழிக்கு அவர் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், திருமால், பிரம்மன், இந்திரன் உள்ளிட்ட இந்துக் கடவுள்களைப் போற்றித் துதித்த தெய்வப்புலவருக்கு “வள்ளுவர் கோட்டம்” என்ற வரலாற்றுச் சின்னம் அமைத்த குடும்பத்தைச் சேர்ந்த நீங்கள், “திருப்பதி உண்டியலை அந்தப் பெருமாளே பாதுகாக்க வேண்டியதுதானே எதற்கு போலீஸ் பந்தோபஸ்து” என பகுத்தறிவு என்ற பெயரில் இந்துக்களின் நம்பிக்கையின் மீது தொடர்ந்து கல்லெறிவது ஏன்? தலைவர்களுக்கு சிலை மட்டும் வைத்தால் போதும் அவர்களின் சிந்தனைகள் எதற்கு என்று நினைத்துவிட்டீர்களா?
வள்ளுவர் மற்றும் வள்ளலார் ஆகியோரின் காவலர்கள் போல தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் உங்கள் தமையன் ஸ்டாலினும், திமுக தலைவர்களும் அந்த மகான்கள் கடைபிடித்த இந்து வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றத் தயாரா என்பதை உறுதிசெய்தீர்களா?
இவ்வாறு உங்கள் சொந்தக் குடும்பத்திற்குள்ளும் கட்சிக்குள்ளும் நிலவும் இரட்டை நிலைப்பாட்டைக் கேள்விக் கேக்காமல், “ஒற்றுமையே பலம்” என்று முழங்கிய இரும்புமனிதர் திரு. பட்டேல் அவர்களுக்கு சிலை வைத்து பெருமைப்படுத்தியது மட்டுமன்றி, “இது ஒரே தேசம் நாம் அனைவரும் சமம்” என அவரின் சிந்தனைகளையும் இன்று வரை போற்றி வரும் பாஜகவினரைக் குறைகூற உங்களுக்கு எந்த உரிமையும் தகுதியும் இல்லை" என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Vanathi reply to DMK Kanimozhi