மத்திய பட்ஜெட்: வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மாயாஜால பட்ஜெட் - எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


மத்திய பட்ஜெட்டின் சில அறிவிப்புகளை வரவேற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதனது அதிர்ப்திகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "2024-25 பொருளாதார ஆண்டறிக்கையில், குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சியை எட்ட, முதலீட்டு மூலதனத்தை ஊக்கப்படுத்தவும், உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க வேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியோரை மையமாகக் கொண்டு 2025-26 நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிதி நிலை அறிக்கையில் வருமான வரி விலக்கு கணிசமாக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்க அம்சமாகும். உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த அடிப்படை சுங்கவரிகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.

பிஹார் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளதால், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை என கூறுவதை விட, பிஹார் மாநில வரவு - செலவு நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலத்துக்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை.

விவசாயத் துறையை பொருத்தவரை 100 மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்கள் உள்பட சில திட்டங்களை அறிவித்துள்ளார்கள். இந்தத் திட்டங்களில் விவசாயிகளுக்கு உற்பத்தியை பெருக்கவும், இடுபொருள் விலையை கட்டுப்படுத்தவும், விளைப்பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்யவும், அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் தமிழ்நாட்டிற்கு எவ்வாறு உதவும் என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும். தமிழ்நாடு மாநிலம் நீர் பற்றாக்குறை மாநிலமாகும். விவசாய வளத்தை பெருக்கவும், விரையமாகும் நீரை பயன்படுத்த உதவும் நதி நீர் இணைப்பு திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

அதேபோல் சிறு, குறு தொழில்களுக்கும், ஏற்றுமதிக்கும் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவும், திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் புதிய வேகத்தை கொடுக்கவும் திட்டங்கள் ஏதும் இல்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் மற்றும் கோவை, மதுரை ஆகிய நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு எவ்வித அறிவிப்பும் நிதி நிலை அறிக்கையில் இல்லாதது தமிழகத்துக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

10 ஆண்டுகளுக்கு மேல் 8 சதவீதத்திற்கு குறையாத பொருளாதார வளர்ச்சியை அடைந்தால்தான் 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய முடியும் என பொருளாதார அறிக்கை கூறுகிறது. இந்நிதி நிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரம்பை மட்டும் உயர்த்தியுள்ளதால், இது ஒரு மாயாஜல அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது. பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8% எப்படி உயர்த்தப்படும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதேபோல் மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றத்தை அளிப்பதாக என்று, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "இந்தியாவுக்கு முக்கியமான ஒரு திட்டமாக இருப்பது நதிகள் இணைப்பு திட்டம், புல்லட் ரயில் திட்டம், GST வரியை குறைத்து அறிவிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது. அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகப்படியாக வேலை வாய்ப்புகளுக்கான எந்த ஒரு அறிவிப்பு திட்டம் இல்லை, மேலும் விலைவாசி உயர்வு குறைப்பதைப் பற்றிய அறிவிப்பும் இல்லை.

இந்தியா முழுவதும் சுங்கச்சாவடி (TOLLGATE) ரத்து அறிவிப்பு இல்லாதது, இந்தியாவின் பழமை வாய்ந்த தமிழ் மொழியை இன்னும் ஊக்கப்படுத்துவதற்கு தனியாக பட்ஜெட் ஒதுக்கவில்லை, மாநிலங்களுக்கு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூபாய் 1.50 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், தமிழகத்தில் உள்கட்டமைப்பு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

இதில், தேசிய நெடுஞ்சாலையாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாநில சாலைகளாக இருந்தாலும் சரி, மாநிலங்களில் உள்ள சாலைகள் அனைத்தும் உலகத் தரத்துக்கு இணையாக அறிவிக்காதது, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரணம் அறிவிக்காதது ஏமாற்றத்தை தருகிறது. மேலும் அசாமில் யூரியா தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அறிவித்தது போல, தமிழகத்திலும் யூரியா மற்றும் மற்ற தொழிற்சாலைகள், வேலை வாய்ப்பை உருவாக்கும் அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

இந்தியா முழுவதும் பருத்தி உற்பத்தியை அதிகரிக்கப்பது, சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதம் ரூபாய் 20 கோடியாக அதிகரிக்கப்பட்டது, மேலும் மாநிலங்களுடன் இணைந்து நூறு மாவட்டங்களில் ரூபாய் 1.7 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் அறிவித்தது, கிராமங்களில் இருந்து பணிக்காக இடம் பெயர்வதை தடுக்க திட்டம். பொம்மை தயாரிப்பு, துவரை, உளுந்து, பருப்பு வகைகளை அதிகமாக உற்பத்தி செய்து, தானிய உற்பத்தியில் இந்தியா பத்து ஆண்டுகளில் தன்னிறைவு பெற்றுள்ளது.

வேளாண் உற்பத்தியை பெருக்க திட்டங்கள் வகுப்பது, தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு ஐந்து லட்சம் பேருக்கு இரண்டு கோடி கடன் வழங்கப்படும் என்பது, எல்லோருக்கும் உணவு கிடைக்கும் வகையில் மாநிலங்களுடன் இணைந்து திட்டம் செயல்படுத்துவது, நாடு முழுவதும் 23 ஐஐடிகள் மேம்படுத்துதல், இந்திய மொழிப் பாடங்கள் அனைத்தும் விரைவில் டிஜிட்டல் மயமாக்கப்படும் திட்டங்கள் வரவேற்கப்படுகிறது.

மேலும், குழந்தைகள் மற்றும் இளம் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்குவது, மருத்துவ கல்லூரியில் இந்தியா முழுவதும் 10 ஆயிரம் இடங்கள் அடுத்த ஆண்டில் இருந்து உயர்த்தப்படும் என்பது, அதே மாதிரி மூன்று ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்பது போன்ற திட்டங்கள் வரவேற்கப்படுகிறது. ஆனாலும் இந்த பட்ஜெட் “யானைப் பசிக்கு சோளப்பொரி” என்ற பழமொழிக்கு ஏற்ப அமைந்துள்ளது" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Budget 2025 ADMK EPS DMDK Statement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->