வைகுண்டம் அருகே பள்ளி மாணவன் மீது அரிவாள் வெட்டு; சாதிய கொலைவெறி தாக்குதலுக்கு திருமாவளவன் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே அரியநாயகபுரம் கிராமத்தைச் சார்ந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாணவன் ஒருவனை  03 பேர் சேர்ந்த கும்பல் பஸ்சை விட்டு இறக்கி கொலவெறி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று பள்ளிக்கு தேர்வு எழுத தேவேந்திர ராஜ் என்ற மாணவன் பஸ்சில் சென்றுள்ளான். அப்போது அவனை மூன்று பேர் பஸ்சில் இருந்து கீழே இறக்கி தாக்குதலில் ஈடுப்பட்டனர். இதனால், மாணவன் தேவேந்திர ராஜின் இருகைகளிலும் விரல்கள் வெட்டப்பட்டுள்ள நிலையில்,  நான்கு விரல்கள் துண்டாகி உள்ளன. அவற்றில் ஒரு விரல் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

கிடைத்த மற்ற மூன்று விரல்களையும் மருத்துவமனையில் ஒட்டும் அறுவை சிகிச்சை தற்போது நடைபெற்று வருகிறது. மாணவனின் தலையில் ஆறு இடங்களில் வெட்டி உள்ளனர். இதனால் மண்டை ஓடும் படுகாயம் பட்டுள்ளது. மேலும் முதுகிலும் பல இடங்களில் வெட்டுக் காயம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவன் தேவேந்திர ராஜுவுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்கி வேண்டும் என  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே அரியநாயகபுரம் கிராமத்தைச் சார்ந்த 11-ஆம் வகுப்பு பள்ளி மாணவன் தேவேந்திர ராஜ் மீது சாதிவெறியர்கள் நடத்தி உள்ள சாதிய கொலைவெறித் தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

சில நாட்களுக்கு முன்னர் கட்டாரிமங்கலத்தில் அரியநாயகபுரம் அணிக்கும் கெட்டியம்மாள்புரம் அணிக்கும் நடைபெற்ற கபடி போட்டியில் அரியநாயகபுரம் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை அரியநாயகபுரம் அணியில் இடம் பெற்றிருந்த தேவேந்திர ராஜ் உள்ளிட்ட அனைவரும் கோப்பையுடன் கொண்டாடி உள்ளனர். இதனைப் பொறுத்துக் கொள்ள இயலாத காழ்ப்புணர்ச்சியால் தான் இத்தாக்குதலை நடத்தி உள்ளனர் என தேவேந்திர ராஜின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

தென்மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சாதிவெறித் தாக்குதல்களும் படுகொலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து இத்தகைய சாதிவெறியாட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

சாதிய வன்கொடுமைகளை தடுத்திடும் வகையில் தமிழக அரசு இதற்கென காவல்துறையில் தனியே ஒரு நுண்ணறிவுப் பிரிவை உருவாக்கிட வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம் என திருமாவளவன் அவரது அறிக்கையில் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirumavalavan condemns casteist murderous attack on school student near Vaikuntam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->