அதிமுக-வில் இருந்து விலகியுள்ள நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர்; அதிர்ச்சியில் கட்சியினர்..!
Chandrashekhar the state joint secretary of MGR Youth Wing and publisher of our Amma newspaper has left the AIADMK
எம்ஜிஆர் இளைஞர் அணியின் மாநில இணைச் செயலாளரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் அ.தி.மு.க.,வில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த விவகாரம் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர். இன்ஜினியரான சந்திரசேகர் வேலுமணி வீட்டில் ரெய்டு நடக்கும் போதெல்லாம் சந்திரசேகர் வீட்டிலும் ரெய்டு நடக்கும் அளவில் அந்த இருவரும் நெருக்கமானவர்கள். சந்திரசேகர் மனைவி ஷர்மிளா கோவை மாநகராட்சியில் 38-வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் திடீரென அ.தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக சந்திரசேகர் அறிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளதாவது;
'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முழு ஈடுபாட்டுடன் அயராது பாடுபட்டு வந்தேன். கடந்த 20 ஆண்டு காலம் அதிமுகவில் முழு அளவில் உண்மையுடன் உழைத்து வந்தேன், கட்சியின் உத்தரவை கடமை தவறாமல் கடைபிடித்து காத்து வந்திருக்கிறேன்.
அதிமுக கட்சி பணியில் எள்ளளவும் சுணக்கம் வராமல் எதிர்பார்ப்பு இன்றி பணியாற்றி இருக்கிறேன். மக்களுக்கான சேவை பணிகளிலும் மக்களோடு மக்களாக நின்று போராடி இருக்கிறேன். கட்சிக்காக நான் செய்த பணிகள் அனைவரும் அறிந்ததே.
தற்போது எனது தனிப்பட்ட பணி காரணமாக தொடர்ந்து கட்சிப் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியாத சூழல் இருக்கிறது. எனவே கட்சியின் அனைத்து வித பொறுப்புகளில் இருந்தும் என்னை முழுமையாக விடுவித்து கொள்கிறேன். கட்சியிலிருந்து விலகும் முடிவை பலத்த தயக்கத்துடன் கனத்த இதயத்துடன் எடுத்திருக்கிறேன்.' என்று பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, சமூக வலைத்தளங்களில் தனது ராஜினாமா கடிதத்தை வெளியிட்ட சந்திரசேகர்,அதன் பின்னர் தனது மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்ததாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக கருத்தை அறிய அவரது மனைவியும், மாநகராட்சி கவுன்சிலருமான ஷர்மிளாவை செய்தியாளர்கள் தொடர்பு கொண்ட போதும் அவர் எந்த பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
English Summary
Chandrashekhar the state joint secretary of MGR Youth Wing and publisher of our Amma newspaper has left the AIADMK