#BREAKING:: ஓபிஎஸ் கைப்பற்றிய ஆவணங்கள்.. சி.வி சண்முகத்திடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு..!!
ChennaiHC orders AIADMK documents to handed over to CVeShanmugam
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது.
பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆவணங்கள் மற்றும் பொருட்களை எடுத்துச் சென்றனர். முன்னதாக அதிமுக சார்பில் பாதுகாப்பு கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. போலீசார் உரிய பாதுகாப்பு வழங்காத நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதாக அதிமுக சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியும், தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, அதிமுக அலுவலக மோதல், கலவரம், ஆவணங்கள், சொத்துகள் சூறையாடப்பட்டது தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான நான்கு வழக்குகளையும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் "அதிமுக அலுவலக கலவரம், மற்றும் அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய பிறகும் விசாரணையை தொடங்கவில்லை. பகல் நேரத்தில் கேமராக்களுக்கு முன்பாகவும், கதவுகளை உடைத்தும் கொள்ளையடித்த நபர்களுக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ் தரப்பினரால் எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்களை மீண்டும் அதிமுக வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 7-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
குறிப்பாக அந்த அலுவலகம் மற்றும் அருகில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என அதிமுக தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் கடந்த 11.07.2022 அன்று ஓபிஎஸ் தரப்பினரால் அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தையும் அதிமுக எம்பி சி.வி.சண்முகம் வசம் ஒப்படைக்குமாறு சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
English Summary
ChennaiHC orders AIADMK documents to handed over to CVeShanmugam