ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு! முதல்வர் ஸ்டாலின், விஜய் இரங்கல்!
CM MK Stalin TVK Vijay Condolence to EVKS E
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். தந்தை பெரியார், சொல்லின் செல்வர் ஈ.வி.கே. சம்பத் என மிகப்பெரும் அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த நண்பர் இளங்கோவன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர் என்று பல்வேறு நிலைகளில் பொதுவாழ்க்கைப் பணிகளைத் திறம்பட ஆற்றியவர். எப்போதும் தன் மனதில் பட்டதைப் பேசிவிடக் கூடிய பண்புக்குச் சொந்தக்காரர்.
அவரது அன்பு மகனும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ராவை இழந்ததில் இருந்தே நண்பர் இளங்கோவன் மனதளவில் மிகவும் உடைந்து போயிருந்தார். எனினும், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று, தன் கவலைகளை மீறி மக்கள் பணியாற்றி வந்தார். என்னை எப்போது சந்திக்க வந்தாலும், "உடம்ப பாத்துக்கோங்க" என்று அக்கறையுடன் சொல்லத் தவறியதே இல்லை. அவ்வாறு அவர் அன்பொழுகச் சொல்லும்போதெல்லாம் நீங்க உங்க உடம்ப பாத்துக்கோங்க என நானும் அவரிடம் சொல்வேன். அதற்கு அவர், நீங்கள் என்னிடம் ஒப்படைத்த மக்கள் பணியை ஏற்ற பிறகு இன்னும் சுறுசுறுப்புடன் பணியாற்றுகிறேன். நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன். நலமாக இருக்கிறேன் என்று உற்சாகம் ததும்பக் கூறி என்னைச் சமாதானப்படுத்துவார்.
சட்டமன்றத்தில் சந்திக்கும்போதும், நமது திராவிட மாடல் அரசின் திட்டங்களைக் குறிப்பிட்டு அவற்றுக்கு மக்களிடையே உள்ள ஆதரவையும் என்னிடம் தெரிவித்துப் பாராட்டுவார். அவர் உடல்நலம் குன்றி மருத்துவமனைக்குப் போகும் நிலையிலும் தனது துணைவியாரிடம், என்னைச் சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார். அதை அறிந்து அவரை நான் சந்தித்தபோது, அவர் பேசும் நிலையில் இல்லை. இருந்தபோதும் அவர் என்னிடம் என்ன சொல்ல நினைத்தார் என்பதை உணர்ந்தவனாகவே நான் இருந்தேன்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், அவரது மகனையும், மருத்துவர்களையும் தொடர்புகொண்டு, அவரது உடல்நலன் குறித்த தகவல்களை அவ்வப்போது அறிந்து வந்தேன். இந்த நிலையில், இன்று காலை அவரது உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்ட செய்தியும் அதனைத்தொடர்ந்து அவர் மறைவுற்றார் என்ற செய்தியும் வந்தடைந்தது. அவரது மறைவு அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது.
பல ஆண்டுகள் தமிழ்நாடு அரசியலில் முன்னணித் தலைவராக விளங்கி, நீண்டகாலம் மக்கள் பணியாற்றிய அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்தின் தோழர்களுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
English Summary
CM MK Stalin TVK Vijay Condolence to EVKS E