அச்சத்திலும், கவலையிலும் மூழ்கியிருந்த மக்களுக்கு இந்த அறிவிப்பு ஆறுதல் - முதல்வரின் அறிவிப்புக்கு சிபிஐ(எம்) வரவேற்பு.! - Seithipunal
Seithipunal


சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழத்தில் ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா, குடியிருப்புகள் பெரும் பிரச்சனைகளாக மாறி வருகின்றன. பல லட்சம் மக்கள் சொந்த குடியிருப்புகள் இன்றி வாடகை வீடுகளில் வசிப்பதும், இன்னும் பல லட்சம் மக்கள் பலவகை அரசு புறம்போக்கு நிலங்களிலும், கோவில், மடங்களுக்கு சொந்தமான நிலங்களிலும் வீடுகட்டி வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் அனைவருக்கும் முறையான வீட்டுவசதி வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டுமென பல கட்ட கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக நீர்நிலைப் புறம்போக்குகளில் உள்ள குடியிருப்புகளை அகற்ற வேண்டுமென நீதிமன்றங்கள் தானடித்த மூப்பாக உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன. இதனடிப்படையில் ஏழை, எளிய மக்களின் வீடுகள் மனிதாபிமானமற்ற முறையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன. இங்கு குடியிருந்த மக்கள் அகதிகளைப் போல நடுத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு வீடுகளை இடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், ஒருவேளை கட்டாயமாக காலி செய்தாக வேண்டுமெனில் மறு குடியமர்வு செய்தபின்னரே மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மே 6 அன்று பல்வேறு வகையான அரசு புறம்போக்குகளில் வசிக்கும் மக்களை அணிதிரட்டி மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மனு கொடுக்கும் போராட்டம் சிபிஐ(எம்) சார்பில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மனுக்களை அளித்துள்ளனர்.

இதனிடையே, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் நீண்டகாலமாக குடியிருந்து வரும் மக்களை அப்புறப்படுத்தி அங்குள்ள வீடுகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெறும் நிலையில் வீடுகளை இடிப்பது அவர்களின் கல்வியை பாதிக்கும் என்ற நியாயமான கோரிக்கைகளை கூட அதிகாரிகள் செவிமடுக்கவில்லை. இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். வீடுகள் அகற்றப்படுவதால் மிகவும் மனமுடைந்த கண்ணையன் என்பவர் தீக்குளித்தார்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து நேற்று (09.05.2022) சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் உரையாற்றும்போது, இனி வரக்கூடிய காலக்கட்டத்தில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடிய நேரத்தில் முன்கூட்டியே அந்த பகுதி மக்களுக்கு மறு குடியமர்வு செய்யக் கூடிய இடங்கள் குறித்து கருத்துக்கள் கேட்கப்படும் என்றும், சம்பந்தபட்ட பகுதி மக்களின் பிரதிநிதிகளோடு பேசி ஒரு இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துவோம் என்றும் அவர்களுக்கான புதிய இடத்தில் தேவைப்படும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் மறு குடியமர்வு செய்யப்படுவார்கள் என்ற தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வரவேற்கிறது. தங்கள் வீடுகள் இடிக்கப்படுமோ என அச்சத்திலும், கவலையிலும் மூழ்கியிருந்த மக்களுக்கு இந்த அறிவிப்பு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

தமிழக முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்தபடி, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அறிவுறுத்தி வீடுகள் இடிப்பதை உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும், நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில், தமிழக அரசு தீர ஆய்வு செய்து, நீர்நிலையாக இனிமேல் பயன்படுத்த முடியாது என்கிற பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்கிட வேண்டுமெனவும், நீர்நிலையாக பயன்படுத்த வாய்ப்புள்ள பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு குடியிருப்பு பகுதியின் அருகாமையிலேயே மாற்று இடம் ஒதுக்கி அவர்களுக்கு வீடுகட்டி தர வேண்டுமெனவும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cpim say about cm stalin anounce may 2022


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->