பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இன்று (22.04.2022) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவரின் அந்த கடிதத்தில், "தேசிய குடும்ப நல 5வது ஆய்வு 2019-20 முடிவுகள், நாட்டிலேயே குடும்ப வன்முறை நிகழ்வுகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் 2வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது எனத் தெரிவிக்கிறது.
ஏற்கனவே, தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதாச்சாரம் 954 என்பதில் (2015-16) இருந்து, 878 ஆக சரிந்துவிட்டதையும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் அதிர்ச்சியான அளவில், தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில், தேசிய சராசரியை விட குறைவான பிறப்பு பாலின விகிதம் நிலவுகிறது என்றும் கூறுகிறது.
சமீபத்திய குடும்ப நல ஆய்வின் அடிப்படையில், ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பெண்களில், திருமணமானவர்களில் 44.7 சதவீதம் பேர் பாலியல் அல்லது வேறு விதமான குடும்ப வன்முறைக்கு ஆளாவது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த விசயத்தில் மாநில அரசின் தீவிர கவனம் தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது.
மனைவியைத் தாக்குவது நியாயமே என்று ஆய்வில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் சரிபாதிக்கும் அதிகமான (52.8 சதவீதம்) ஆண்கள் கருத்து கூறியுள்ளனர். 80 சதவீதம் பெண்கள், கணவர் தங்களைத் தாக்குவது சரியே என்று பகிர்ந்துள்ளனர். பிறந்த வீட்டிலேயே, தந்தையர்கள், தாயின் மீது நிகழ்த்தும் குடும்ப வன்முறையை கண்ணுற்ற பெண்களின் சதவீதம் 48 ஆக உள்ளது. இது தமிழகத்தின் குடும்ப வன்முறையை இயல்பான நடைமுறையாக எடுத்துக் கொள்ளும் மனநிலையை காட்டுகிறது; குடும்ப வன்முறைக்கு எதிரான கருத்தியல் பிரச்சாரத்தின் தேவையை இது உணர்த்துகிறது.
குடும்ப வன்முறையில் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிவித்துள்ள பெண்களில் 81 சதவீதம் பேர் உதவி எதையும் தேடுவதில்லை. நாட்டிலேயே தமிழகத்தில்தான், உதவியை நாடாத பெண்களின் விகிதம் அதிகம் என்பது கவலையுடன் பார்க்க வேண்டிய விபரமாகும். உதவிகள் கேட்பவரே மிகக் குறைவு. அப்படி கேட்பவர்களில் 81.6 சதவீதம் பேர் குடும்பத்திற்குள்ளாகவே மட்டுமே உதவிகளைக் கேட்கின்றார்கள். 2.8 சதவீதம் மட்டுமே காவல்துறையின் உதவியை நாடுகின்றனர்.. ஏற்கனவே நடந்த குடும்ப நல ஆய்விலும் இதே நிலைமைதான் தெரிய வந்தது. குடும்ப வன்முறையை தடுப்பதற்கான சட்டம், பாதுகாப்பு அதிகாரிகள் போன்ற ஏற்பாடுகள் உள்ளன என்பது அநேகம் பேருக்குத் தெரியவில்லை என்பதே யதார்த்தம்.
ஆய்வில் பங்கேற்றவர்களில் தமிழ்நாட்டில் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் சதவீதம் 32.8. அவ்வப்போது மது குடிக்கும் ஆண்கள் குடும்ப வன்முறை செய்வதற்கான சாத்தியம் 57.6 சதவீதமாக உள்ளது. அடிக்கடி மது குடிக்கும் ஆண்கள் மத்தியில் இந்த சதவீதம் 81 ஆக உள்ளது. இவ்வாறு, ஆண்களுடைய குடிப்பழக்கம், குடும்ப வன்முறைக்கான முக்கிய காரணியாக உள்ளது.
தேசிய குடும்ப நல ஆய்வு-5, கொரோனா பெருந்தொற்றுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறை நிகழ்வுகள் பல மடங்கு அதிகரித்தன. உலகம் முழுவதுமே இக்காலத்தில் இரண்டில் ஒரு பெண் குடும்ப வன்முறைக்கு ஆளானதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சிகரமான விவரத்தினை வெளியிட்டது. இதனை நிழல் பெருந்தொற்று (Shadow Pandemic) என்றும் குறிப்பிட்டது.
நம் நாட்டிலும் 2021 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 2020 ஐ விட 46 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் (NCW) வெளியிட்ட தரவு காட்டுகிறது. இதில் 35 சதவிகித வழக்குகள் குடும்ப வன்முறை அல்லது அல்லது கணவன் மற்றும் உறவினர்களின் கொடுமை தொடர்பானவை. குடும்ப வன்முறை தமிழகம் சந்திக்கும் மிகப்பெரும் சவாலாக மாறி வருகிறது.
நாடு முழுவதும், வலதுசாரி பிற்போக்கு சக்திகளின் ஆதிக்கம், கருத்தியல் மற்றும் நடவடிக்கை பெண்களுக்கு எதிரான பலவகை வன்முறை நடவடிக்கைகளுக்கும் ஊக்கமளிக்கிறது. கல்வி உட்பட பல்வேறு மனித வளக் குறியீடுகளில் முன்னேறியுள்ள போதிலும், தமிழ்நாட்டில், குடும்ப வன்முறை அதிகமாக இருப்பது ஆழ்ந்த கவலை தருகிறது. எனவே, தமிழ் நாட்டில் நாம் ஒரு மாறுபட்ட சூழலை உருவாக்குவது அவசியமாகிறது.
அதற்காகக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை விரைவாக செயல்படுத்த வலியுறுத்துகிறோம்:
மாநிலத்தில் குடும்ப வன்முறை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவதுடன், அதனை விவாதிப்பதற்காக சட்டமன்ற சிறப்பு அமர்வினை நடத்திட வேண்டும்.
சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கத்தின் மோசமான தாக்கம் குடும்ப கட்டமைப்பிற்குள்ளும் கடும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே வரதட்சணை உள்ளிட்டு குடும்ப வன்முறைக்கான காரணிகளை எதிர்த்த பிரச்சாரத்தை தமிழ்நாடு அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இதற்காக அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், முன்பு, கலைஞர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது போல சமூக சீர்திருத்த துறையை ஏற்படுத்தி செயல்படுத்திட வேண்டும்.
மாநிலத்தின் நிதிநிலை அறிக்கையை, பாலின நிகர்நிலை நோக்கிலும் தயாரித்திட வேண்டும்.
குடும்ப வன்முறை பாதுகாப்பு அதிகாரிகளை வட்ட அளவிலும், தேவைப்பட்டால் அதற்குக் கீழும் நியமித்திட வேண்டும்.
குடும்ப வன்முறையை எதிர்கொண்ட பெண்களுக்கு சட்ட உதவியைக் காலத்தே செய்வதுடன். மாவட்டம் தோறும் இலவச சட்ட உதவி மையங்களை அதிகரிக்க வேண்டும். வழக்குகளை குறித்த காலவரையறைக்குள் கையாள வேண்டும். குடும்ப வன்முறை புகார் அளிக்க தனியாக உதவி எண் உருவாக்கி விளம்பரப்படுத்த வேண்டும்.
குடும்ப வன்முறையினால் மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்களுக்கு கலந்தாலோசனை (Counseling) மையங்களை வட்ட அளவில் ஏற்படுத்தி அந்தந்த பகுதிகளில் விளம்பரப்படுத்த வேண்டும்.
குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணைக்கு எதிரான உறுதி மொழியை ஒவ்வொரு கல்லூரியிலும், ஒருவர் பணிக்கு சேர்வதற்கு முன்பாகவும் எடுப்பதை அரசு கட்டாயமாக்கலாம்.
காவல் துறை, விசாரணை அமைப்புகள், நீதித்துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்களுக்கு பாலின நிகர்நிலை பயிற்சி அளிக்க வேண்டும்.
பெண்களை இழிவுபடுத்தும் அல்லது போகப் பொருளாக சித்தரிக்கும் விதத்தில் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகளின் நடத்தை விதிகளில் ஒன்றாக இதை மாற்ற வேண்டும்.
வீட்டுப் பணிகள் மதிப்பு குறைந்தவை, அவை பெண்களுக்கு மட்டுமானவை என்ற பார்வையை மாற்றும் விதத்தில் அரசின் திட்டவட்டமான தலையீடுகள் தேவை. எனவே, குடும்பத்தில் பெண்களின் உழைப்பை மதிப்பீடு செய்வது என்று தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான வரைவுக் கொள்கை கூறுவதை விரைவாக அமலுக்குக் கொண்டுவர வேண்டும்.
பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி பாடத்திட்டங்களில் பாலின நிகர்நிலை கண்ணோட்டம், குடும்ப ஜனநாயகம் உறுதி செய்யப்பட வேண்டும். ஒரு பாடமாக அல்லாமல், கல்வித்திட்டத்திலேயே பாலின நிகர்நிலை கண்ணோட்டம் விரவி நிற்க வேண்டும்.
பெண்களுக்கான வருமான வாய்ப்புகளை அதிகரிப்பது, பிரச்சனைகளைத் துணிவுடன் எதிர்கொள்ள உதவும். மகளிர் சுய உதவிக்குழுக்களை வலுப்படுத்த வேண்டும். உழைப்புப் படையில், பெண்களின் எண்ணிக்கையைக் கூடுதலாக்கிட வேண்டும். அதற்கான சிறப்பு பயிற்சிகள் உள்ளிட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு நில உரிமை மற்றும் வாரிசு உரிமையை உறுதி செய்யும் சட்டங்களை வலுப்படுத்த வேண்டும். பெண்களை விவசாயிகள் என அங்கீகரிப்பதும், பெண்கள் பெயரில் நிலப்பட்டா வழங்குவது, நில விநியோகம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
குடும்ப வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொடர் விளம்பரங்களை அனைத்து ஊடகங்களிலும் அரசு வெளியிட வேண்டும்.
பெண்கள் பற்றிய ஊடக சித்தரிப்புகள் முற்போக்காக இருக்க வேண்டும் என பெண்களுக்கான அரசின் வரைவுக் கொள்கை தெரிவிக்கிறது. இவ்விசயத்தில் திட்டவட்டமான தலையீடுகள் தேவை. பெண்கள் மீதான வன்முறை காட்சியமைப்புகள் ஊடகங்களில் வருமானால் ‘சட்ட ரீதியாக தவறு’ என்கிற எச்சரிக்கை (statutory warning) அந்த காட்சியிலேயே இடம்பெற்றிட வேண்டும் என்ற அம்சத்தை விரைவில் அமலாக்க வேண்டும்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மதுக்கடைகளை படிப்படியாக குறைத்திட வேண்டும்.
குடி நோய் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்த வேண்டும். குடிநோய் சிகிச்சைக்கு காப்பீடு வழங்க வேண்டும். குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாவட்டம்தோறும் கலந்தாலோசனை (கவுன்சிலிங்) மையங்கள் ஏற்படுத்த வேண்டும். குடிநோய் மரணங்களுக்கு காப்பீட்டினை (Insurance) உறுதி செய்ய வேண்டும்.
குடும்ப வன்முறை ஒரு குற்றச் செயல் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாலின நிகர்நிலைக் கண்ணோட்டத்தை பரவலாக்கும் விதத்தில், மேற்கண்ட நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - யின் சார்பாக வலியுறுத்துகிறோம்"
இவ்வாறு அந்த கடிதத்தில் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்