எல்.ஐ.சி பங்கு விற்பனை : தனியார் நலனுக்காக தேச வளர்ச்சியை காவு கேட்கும் மத்திய அரசு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்.!
CPIM Say About NLC
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணிலா செயலாளர் கே பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கான அடுத்த நகர்வை அரசாங்கம் செய்துள்ளது. இந்திய பங்குச் சந்தை பத்திர மாற்று ஆணையத்தில் (செபி) நிறுவன தகவல் அறிக்கையை எல்.ஐ.சி தாக்கல் செய்துள்ளது. இது தேச வளர்ச்சிக்கான நிதியாதாரங்களை, சாமானிய நடுத்தர மக்களின் சமூகப் பாதுகாப்பை, கோடானு கோடி பாலிதாரர்களின் நலனை பாதிக்கிற இந்த முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாக கண்டிக்கிறது.
நாடாளுமன்றத்தில் தனி மசோதாவாக கொண்டு வந்து பரந்த கூர்மையான விவாதத்திற்கு உள்ளாக்க வேண்டிய ஒரு முக்கியமான பொருளாதார முடிவை பட்ஜெட் உரையுடன் இணைந்த நிதி மசோதாவுக்குள் திணித்து, ஒளித்து விவாதங்களுக்கான வாய்ப்பை அறவே இல்லாமல் நிறைவேற்றிய அரசின் நடவடிக்கை நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளை, மாண்புகளை சீர் குலைத்த செயலாகும்.
இந்திய நாட்டின் இன்சூரன்ஸ் துறையின் வரலாறு நெடுகிலும் தனியார், அந்நிய நிறுவனங்களின் தோல்வி தெள்ளத் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. 1818 இல் இந்தியாவில் முதன் முதலாக வந்த அந்நிய மெட்ரோ பாலிட்டன் இன்சூரன்ஸ் நிறுவனம் 16 ஆண்டுகளிலேயே திவால் ஆகியுள்ளது. இந்திய தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் மக்களின் சேமிப்புகளை மோசடிக்கு ஆளாக்கியதும் பாலிசிதாரர்களை ஏமாற்றியதும் நடந்தேறியது. இந்த பின்புலத்தில்தான் 1956 இல் 16 அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளிட்ட 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேசவுடமை ஆக்கப்பட்டன. இந்த வரலாற்று சக்கரத்தையே பின்னோக்கி சுழற்ற ஒன்றிய பா.ஜ.க அரசு முனைந்திருக்கிறது.
5 கோடி மூலதனத்துடன் துவங்கப்பட்ட எல்.ஐ.சி 2011 இல் தனது மூலதனத்தை 100 கோடியாக உயர்த்திய போதும் தற்போது பங்கு விற்பனைக்காக 6300 கோடியாக உயர்த்திய போதும் அரசிடம் இருந்து ஒரு ரூபாயைக் கூட எதிர்பார்க்கவில்லை. எல்லாமே அதன் உள் நிதி வளத்தில் இருந்தேதான் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதன் சொத்து மதிப்பு இன்று 38 லட்சம் கோடிகளாக உயர்ந்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் அதன் வருமானம் 6,80,000 கோடிகளை கடந்திருக்கிறது. இவ்வளவு குறைவான மூலதன தளத்தில் இவ்வளவு அதிகமான நிதி திரட்டலை சாத்தியமாக்கி இருப்பது பொருளாதார உலகின் பெரும் சாதனை.
வழக்கமான நட்டம், திறமையின்மை, மக்களுக்கு சேவை பரவல் என்ற எந்த குற்றச் சாட்டையும் வைக்க முடியாத ஒன்றிய அரசு எல்.ஐ.சி பங்கு விற்பனையை நியாயப்படுத்த புதிய காரணங்களை தேடுகிறது. பங்குகளை மக்களுக்கு விற்கிறோம் என்ற வாதத்தை களம் இறக்கியுள்ளது. இந்தியப் பங்குச் சந்தைக்குள் எந்த சாமானிய மக்கள், நடுத்தர மக்கள் முதலீடு செய்கிறார்கள். கோடானுகோடி மக்கள் வேலையின்றி, வருமானம் இழந்து, விலைவாசி உயர்வில் தத்தளித்து நிற்கும் நிலையில் அரசின் இந்த வாதம் குரூரமான நகைச்சுவை.
தேச நிர்மாணப் பணியில் அதன் பங்களிப்பு மிக முக்கியமானது. ஒன்றிய அரசு பத்திரங்களில் 13.87 லட்சம் கோடி, மாநில அரசு பத்திரங்களில் 9.87 லட்சம் கோடி, ஆதார தொழில் வளர்ச்சிக்கு மூன்று லட்சம் கோடிக்கும் மேல் என அதன் பங்களிப்பு 32 லட்சம் கோடியை தொட்டு நிற்கிறது.
மேலும் எல்.ஐ.சி லட்சக்கணக்கான கோடிகளை பொருளாதாரத்திற்கு கொண்டு வருவதன் மூலம் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வரும் நிறுவனம். சாமானிய மக்களுக்கு, கிராமங்களுக்கு, பெண்களுக்கு இன்சூரன்ஸ் பரவலை செய்து வருகிற நிறுவனம். 99 சதவீத இறப்பு உரிம பட்டுவாடாவை செய்து மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள நிறுவனம். அரசின் இந்த நகர்வு எதிர்காலத்தில் இட ஒதுக்கீட்டிற்கும், சமூக நீதிக்கும் எதிராக அமையும் அபாயம் உள்ளது.
25 ஆண்டு காலமாக இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீடு அனுமதி, தனியார் மய முயற்சிகளை எதிர்த்துப் போராடி வரும் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி மக்கள் கருத்தை திரட்டும், எல்.ஐ.சியை பலப்படுத்துகிற முயற்சிகளுக்கு துணை நிற்கும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.