பழனிச்சாமி அணியில் இருந்து விலகிச் செல்லும் சி.வி சண்முகம்..!!
CV Shanmugam to walk away from EPS team
அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 35 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. காலை முதல் மெரினாவில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடத்தில் பொதுமக்களும், அதிமுகவினரும் அஞ்சலி செலுத்த வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார். பின்னர் இ.பி.எஸ் தரப்பினர் சார்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அவரைத் தொடர்ந்து ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் வந்து எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி சண்முகம் பழனிச்சாமி அணியுடன் வராமல் தனியாக வந்து மரியாதை செலுத்தியுள்ளார்.
இவர் ஏற்கனவே ஜெயலலிதா நினைவு நாளின் பொழுது அதிமுகவினரால் கடைபிடிக்கப்பட்ட நாளுக்கு முதல் நாள் ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். இதனால் தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சி.வி சண்முகம் எடப்பாடி அணியிலிருந்து விலகுகிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இ.பி.எஸ் தரப்பினர் சற்று அதிர்ச்சியில் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி பழனிச்சாமி தரப்பினருடன் நெருக்கம் காட்டாத நிலையில் சி.வி சண்முகமும் விலகி நிற்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
English Summary
CV Shanmugam to walk away from EPS team