டெல்லி புதிய முதலமைச்சர் பதவியேற்பு தேதி அறிவிப்பு!
Delhi new chief minister Inauguration date announcement
டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
இதையடுத்து 6 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 13ம் தேதி திகார் சிறையில் இருந்து விடுதலையானார். இதனை தொடர்ந்து 15ம் தேதி ஆம் ஆத்மி நிர்வாகிகள் மத்தியில் பேசிய கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை 48 மணிநேரத்தில் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார்.
மேலும் தன்னை மக்கள் நேர்மையானவன் என்று சொல்லும்வரை முதலமைச்சர் பதவியை ஏற்க மாட்டேன் என்றும் கூறிய அவர், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கூறினார்.
அந்த வகையில் டெல்லியில் புதிய முதலமைச்சராக அதிஷியை, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஒரு மனதாக தேர்வு செய்துள்ளனர்.சுஷ்மா சுவராஜ், ஷீலா தீக்சித்தை தொடர்ந்து டெல்லியின் 3வது பெண் முதலமைச்சராக ஆம் ஆத்மியை சேர்ந்த அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே அதிஷி பதவியேற்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூறுகையில், வரும் 26, 27-ம் தேதிகளில் சிறப்பு சட்டசபை கூட்டம் நடை பெறும் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், டெல்லி புதிய முதலமைச்சராக வரும் 21 -ம் தேதி அதிஷி பதவியேற்பார் என்றும், அவருடன் மற்ற அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
English Summary
Delhi new chief minister Inauguration date announcement