பிளவை ஏற்படுத்த விரும்பவில்லை.. டெல்லிக்கு செல்லும் முன் டி.கே சிவகுமார் பரபரப்பு பேட்டி..!!
DKSivakumar said he does not want create division in congress MLAs
கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற சர்ச்சை கடந்த சில நாட்களாகவே நீடித்து வருகிறது. பெங்களூரில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாநில அடுத்த முதல்வர் யார் என்பதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நேற்று முன்தினம் சித்தாராமையா டெல்லி சென்ற நிலையில் நேற்று சிவக்குமார் டெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் உடல் நலக் குறைவு காரணம் காட்டி தனது டெல்லி பயணத்தை திடீரென ரத்து செய்தார். இதனைத் தொடர்ந்து டெல்லி தலைமை நேற்று இரவு டி.கே சிவகுமாருக்கு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று டி.கே சிவகுமார் தற்பொழுது டெல்லிக்கு விரைந்துள்ளார்.
டெல்லி செல்லும் முன்பு செய்தியாளரிடம் பேசிய அவர் "நாங்கள் 135 எம்எல்ஏக்களும் ஒற்றுமையாக இருக்கிறோம், அவர்கள் நான் முதல்வராக வேண்டும் என விருப்பப்பட்டாலும் பொறுப்புடன் நடப்பேன். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே பிளவை ஏற்படுத்த விரும்பவில்லை. யாரையும் முதுகில் குத்த மாட்டேன், மிரட்டவும் மாட்டேன்" என டெல்லி செல்லும் முன்பே பெங்களூரு விமான நிலையத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வராக சித்தராமையாவை டெல்லி தலைமை தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் பெங்களூர் விமான நிலையத்தில் டி.கே சிவகுமார் கூறியிருக்கும் கருத்து அரசியல் வட்டாரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
English Summary
DKSivakumar said he does not want create division in congress MLAs