07-வது முறையாகவும் திமுக ஆட்சியமைக்கும்; முதலமைச்சர் உறுதி..!
DMK to form the government for the 07th time
திராவிட மாடல் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற மாபெரும் மக்கள் பேரணியும் மத்திய பா.ஜ.க. அரசை பணியச் செய்தது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடுத்தத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன் பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வெற்றி மடல்.
தமிழ் நாட்டின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதில் எந்தவித சமரசமும் இல்லாமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது உங்களில் ஒருவனான என்னுடைய தலைமையிலான திராவிட மாடல் அரசு.
எல்லாருக்கும் எல்லாம் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு அனைவருக்குமான ஆட்சியைப் பாகுபாடின்றி வழங்கி வரும் திராவிட மாடல் எனும் மக்கள் அரசின் மீது தமிழ்நாடு எந்தளவு நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் மதுரையில் மக்கள் பெருந்திரளுடன் நடைபெற்ற பாராட்டுக் கூட்டம் மெய்ப்பித்திருக்கிறது.
தமிழர்களின் பண்பாடும், நாகரிகமும் எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்பதை அண்மையில் வெளியிடப்பட்ட 'இரும்பின் தொன்மை' என்கின்ற ஆய்வறிக்கையின் மூலம் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழர்கள் இரும்புத் தாதிலிருந்து, இரும்பைப் பிரித்து எடுத்து, கருவிகள் செய்யும் தொழில்நுட்பத்தை அறிந்த உலகின் மூத்த முன்னோடி நாகரிகம் என்பதை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்திருக்கிறோம்.
மதுரை மக்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் டங்ஸ்டன் கனிம ஏலத்திற்கு எதிராக நடத்திய மாபெரும் மக்கள் பேரணியை சிறு அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில், அழுத்தமான வகையில், அறவழியில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு திராவிட மாடல் அரசு உறுதுணையாக இருந்தது.
அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானமும், திராவிட மாடல் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற மாபெரும் மக்கள் பேரணியும் மத்திய பா.ஜ.க. அரசை பணியச் செய்தது.டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கான முயற்சியை கைவிடுவதாக மத்திய அரசிடமிருந்து அறிவிப்பு வெளியானது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதனை எதிர்த்து வெற்றி காண்பதில் உங்களில் ஒருவனாக என்னுடைய தலைமையிலான திராவிட மாடல அரசு உறுதியாக இருக்கிறது.
டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்தை மக்களின் ஆதரவுடன் ரத்து செய்த பெருமையுடன், விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் ஆய்வுப் பணியை மேற்கொள்கிறேன்.
விழுப்புரம் மாவட்ட மக்களின் கோரிக்கையை மட்டுமின்றி, நம் உயர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் உயிரோடு கலந்த உடன்பிறப்புகளான உங்களையும் சந்தித்து மகிழ்வேன்! ஏழாவது முறையும் தி.மு.க.வே ஆட்சி அமைக்கும் என்பதை உங்கள் மீதான நம்பிக்கையுடன் உரக்கச் சொல்வேன்!" என்று அக்கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
DMK to form the government for the 07th time