மட்டற்ற மகிழ்ச்சி! தமிழக அரசு உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும் - அன்புமணி இராமதாஸ்!
Dr Anbumani Ramadoss Happy for Online Gambling Ban 2023
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளித்திருப்பது தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது : இனியாவது ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் முடிவுக்கு வரட்டும் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 23-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுக்கு ஆளுனர் ஆர்.என். இரவி ஒப்புதல் அளித்திருக்கிறார். ஆளுனரின் முடிவு மிகவும் தாமதமானது என்றாலும் கூட, அப்பாவி மக்களின் உயிரிழப்புகளைத் தடுக்கும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா? என்பதையே ஆளுனர் மீண்டும், மீண்டும் வினாவாக எழுப்பி வந்தார். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பா.ம.க.வின் நிலைப்பாடு தான் வெற்றி பெற்றிருக்கிறது.
ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுனர் செய்த தாமதம் ஏற்க முடியாதது. கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளித்திருந்தால் அதன் பின் நிகழ்ந்த 21 தற்கொலைகளை தவிர்த்திருந்திருக்க முடியும். மீண்டும் ஒரு சட்டம் இயற்றும் தேவையும் இருந்திருக்காது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. இப்போது ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டிருப்பது பா.ம.கவிற்கு கிடைத்த வெற்றி. தற்கொலைகள் இனி நிகழாது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும். நீதிமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட வாய்ப்புள்ள வழக்குகளை சட்ட வல்லுனர்களைக் கொண்டு முறியடிக்கவும் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று அனபமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss Happy for Online Gambling Ban 2023