#Breaking | மகிழ்ச்சிதான்., ஆனால் குழுவை கலைக்க வேண்டும் - தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் பரபரப்பு கோரிக்கை!
Dr Anbumani Ramadoss Say About CM Stalin Order Job Issue
சமூகநீதிக்கு எதிரான செயல்களை அனுமதிக்கக் கூடாது: மனிதவள சீர்திருத்தக் குழுவை கலைக்க வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சற்றுமுன் அவரின் டிவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழக அரசுப் பணிகளுக்கான ஆள் தேர்வு மற்றும் பயிற்சிகளில் மாற்றம் செய்தல், குத்தகை முறையில் பணியாளர்களை பெறுவது ஆகியவை குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்கான மனிதவள சீர்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழக அரசின் மனிதவளத்துறை இது குறித்து வெளியிட்ட அரசாணை எண் 115 சமூகநீதிக்கு எதிராக இருப்பதை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதில் உள்ள நியாயங்களை உணர்ந்தும், அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றும் முதலமைச்சர் உடனடியாக செயல்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அதே நேரத்தில் ஆய்வு வரம்புகளை மாற்றுவது மட்டுமே இந்த சிக்கலுக்கு தீர்வாகி விடாது. மனிதவள சீர்திருத்தக் குழு அமைக்கப்படுவதன் நோக்கம் நிரந்தர பணி நியமனங்களை நிறுத்தி விட்டு, தற்காலிக, ஒப்பந்த முறை நியமனங்களை ஊக்குவிப்பது தான் என்றால் அந்த சமூக அநீதியை ஏற்க முடியாது.
நிரந்தர பணி நியமனங்களே தொடரும்; தற்காலிக, ஒப்பந்த முறை நியமனங்கள் அனுமதிக்கப்படாது என்று அரசு கொள்கை அறிவிப்பு வெளியிட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை என்றால் சமூக நீதிக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள மனிதவள சீர்திருத்தக் குழுவை கலைக்க வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss Say About CM Stalin Order Job Issue