இரண்டாவது முறையாக தாக்குதல்., சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்.!
Dr Anbumani Ramadoss Warn to SriLankan Navy Force
தமிழக மீனவர்கள் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தியுள்ள சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே 10 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் தாக்கி விரட்டியடித்துள்ளனர்; அவர்களின் வலைகள் அறுத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன; பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படையினர் தாக்குதல் நடத்துவது கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது முறையாகும். கடந்த 10-ஆம் தேதி நள்ளிரவிலும் கச்சத்தீவு பகுதியில் இதே போன்று தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது!
திசம்பர் 18-ஆம் தேதி கைது செய்யப்பட்ட 42 மீனவர்களும், 20-ஆம் தேதி கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும் சிங்கள அரசால் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. இன்னொருபுறம் நடுக்கடலில் சிங்களப்படையின் அத்துமீறல் தொடர்கிறது. இவற்றுக்கு முடிவு எப்போது?
ஒரு புறம் இலங்கைக்கு இந்தியா நிதியுதவியும், இராணுவ உதவிகளையும் வாரி வழங்குகிறது. மறுபுறம் தமிழக மீனவர்களை சிங்களப் படை கொடுமைப்படுத்துகிறது. இது என்ன நியாயம்? மீனவர்கள் மீதான அத்துமீறலை கைவிடும்படி இலங்கையை இந்திய அரசு எச்சரிக்க வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss Warn to SriLankan Navy Force