குவாரி விபத்துக்குக் காரணமான, ஆளும் அரசியல் புள்ளிகள் மீதும் நடவடிக்கை தேவை.. கிருஷ்ணசாமி வலியுறுத்தல்.!! - Seithipunal
Seithipunal


நெல்லை – முன்னீர் பள்ளம் – குவாரி விபத்துக்குக் காரணமான, ஆளும் அரசியல் புள்ளிகள் மீதும் நடவடிக்கை தேவை, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 25 லட்சம், காயமுற்றோருக்கு 10 லட்சம் அரசும், குவாரி நிர்வாகமும் தனித்தனியே வழங்க வேண்டும், தமிழ் நாட்டில் கல்குவாரிகள் அனைத்தும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் க.கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், முன்னீர் பள்ளம், பொன்னாங்குடியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்து விட்டதாகவும், இருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் வரும் செய்திகள் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. கல்குவாரி விபத்தில் இறந்தவரது குடும்பத்தாருக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்றோருக்கு உரிய உயரிய சிகிச்சை அளிக்கவும், விபத்தில் சிக்கி இருப்போரை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன். இந்த கோர விபத்துக்கு முழுக்க முழுக்க மாவட்ட நிர்வாகமும், இந்த அரசுமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

ஆறுகளில் மணல், குளங்களில் செம்மண், விளைநிலங்களில் சரளை மண் அள்ளுதல்; மலைகளையும் பாறைகளையும் உடைத்து ஜல்லி மற்றும் எம்சாண்ட் தயாரித்தல் போன்றவற்றிற்கு அனுமதி அளிக்கின்ற பொழுது சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை.  ஆனால் சட்டரீதியாக 5 அல்லது 10 அடிக்கு அனுமதி பெற்றுக் கொண்டு, எவ்வளவு சுரண்ட முடியுமோ, அந்த அளவிற்கு இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில்  நடந்துவரும் அவலமாகும்.

எதிர்க்கட்சியாக இருந்த பொழுது, இது போன்ற எல்லா குறைபாடுகளையும் சுட்டிக்காட்டிய இன்றைய திமுக ஆட்சிக்கு வந்த பின்பு எல்லா சட்ட விதிமுறைகளையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு, குறிப்பாக கிராமங்களுக்கு மிக அருகாமையில் இருக்கக்கூடிய கல்குவாரிகள், மிக ஆபத்தான ஆழத்தில் சென்ற கல்குவாரிகளை கூட மூடி வைக்காமல் அனுமதி அளித்ததன் விளைவாகவே இப்பொழுது முன்னீர் பள்ளம் - பொன்னாங்குடி குவாரி விபத்து ஏற்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட அந்த கல்குவாரியை மீண்டும் இயக்குவதற்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது? அரசியல் தலையீடு இல்லாமல் இதுபோன்ற அனுமதி கிடைத்திடுமா? பினாமி பெயர்களில் நடக்கும் அக்குவாரிகளில் ஆளும் அரசியல் புள்ளிகளும் பங்குதாரராக இருக்கின்ற காரணத்தினாலேயே இது போன்ற சட்டவிரோத குவாரிகள் நடப்பதும், அதனால் விபத்துக்கள் ஏற்பட்டு அப்பாவி மக்கள் உயிரிழக்கும் சூழலும் ஏற்படுகிறது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே தென்பாலை என்ற கிராமத்தில் வீடுகள் எல்லாம் இடிகின்றன; குவாரி தூசுகளால் அக்கிராம மக்களுக்கு உடல்நல சீர்கேடு நடைபெறுகிறது என்று நாம் பலமுறை வலியுறுத்தியும் கூட சொத்தை காரணங்களைக் கூறி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அதை இன்னும் அனுமதிக்கிறது. அந்த குவாரியில் பல அரசியல் புள்ளிகளுக்குப் பங்கு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியம், உழக்குடி கிராமத்தில் பொதுமக்களின் எதிர்ப்புகளையும் மீறி ஒரு குவாரி இன்றும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாக, அங்குச் சுற்றி இருக்கக்கூடிய 500க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் தங்களுடைய விவசாய நிலங்களில் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் வற்றி விடுகின்ற காரணத்தினால் அவர்கள் விவசாயம் செய்ய முடியாத நிலைகள் ஏற்பட்டு வறுமை நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் இடையில் நிறுத்தப்பட்ட கல்குவாரிகள் அரசியல் ஆதரவோடு மீண்டும் இயக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிராமக் குழாய்கள், மயானங்களிலும் சட்ட விரோதமாக கிரானைட் வெட்டி எடுத்த நிறுவனம் முடக்கி வைக்கப்பட்டது. மதுரையின் பெருமையாகக் கருதக்கூடிய ஆனைக்குன்றையும் கூட வெட்டி எடுக்க முயன்றதையும், நீதிமன்ற தலையீட்டால் அது தடுத்து நிறுத்தப்பட்டதையும் அனைவரும் அறிவர்.கடந்த பத்து ஆண்டுகளாக அப்பகுதி கிரானைட் குவாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. தற்போது மீண்டும் மேலூர், திருப்பத்தூர் ஊழல் கிரானைட் கம்பெனிக்கு கனிமம் வெட்டி எடுக்க அனுமதிக்கப்பட்டதாகச் செய்திகள் வருகின்றன; அவற்றின் அனுமதி இரத்துச் செய்யப்பட வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு நடக்கும், கனிமவள கொள்ளை ஈவிரக்கமில்லாமல் நடக்கும் என்பதற்கு இலக்கணமாக இப்பொழுது எல்லா செயல்களும் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம், வடக்கு சிலுக்கன் பட்டி, தெற்கு  சிலுக்கன் பட்டி என்ற இரு கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்விடங்கள், விளை நிலங்கள், கோவில்கள் என 5000 ஏக்கர் நிலத்தைச் சட்டவிரோதமாக விற்பனை செய்ய ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக செய்திகள் வருகின்றன. ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திற்குள்  இயற்கை வளங்கள் கொள்ளை மற்றும்  நில அபகரிப்புகளில் ஆளும் கட்சி தனது கோர கரங்களை நீட்டி இருக்கிறது. இவையெல்லாம் கடும் கண்டனத்திற்கு உரியவைகள்.
ஏறக்குறைய 5-10 வருடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து, தற்போது மீண்டும் அனுமதி அளிக்கப்பட்ட கல்குவாரிகளின் உரிமத்தை, ரத்துச் செய்துவிட்டு தமிழகத்திலுள்ள அனைத்து கல்குவாரிகளின் பாதுகாப்பு தன்மை குறித்து முழுமையாக விஞ்ஞான ரீதியாக ஆய்வு மேற்கொண்ட பிறகு பாதுகாப்பை உறுதி செய்துவிட்ட பின்பே மீண்டும் அவைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். நில அபகரிப்புகள் மீண்டும் தொடங்கிவிட்டன. அது தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தப்பட வேண்டும். 

முன்னீர்பள்ளம் - பொன்னாங்குடி கிராமத்திலுள்ள குவாரியில் இறந்தவர்களுக்கு தலா 25 லட்சமும், காயமுற்றோருக்கு தலா ரூபாய் 10 லட்சமும் மாநில அரசு வழங்க வேண்டும். அதேபோல குவாரி உரிமையாளரும் அதே அளவிற்கு நட்ட ஈடு வழங்க வேண்டும். இந்த குவாரிக்கு சட்டவிரோத உரிமை அளித்தவர்கள் மீதும் பின்புலமாக இருக்கக்கூடிய அரசியல் புள்ளிகள் மீதும் உரிய வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து குவாரிகளுடைய பாதுகாப்பு உறுதி செய்யப் படுகின்ற வரையிலும் எவ்விதமான கல் குவாரிகள் இயங்குவதற்கும் அரசு அனுமதிக்கக் கூடாது எனவும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr krishnasamy says about nellai quarry accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->